சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தொழிலதிபர் ஜெம் வீரமணியிடம், புழல் சிறையில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெம் வீரமணி மீது இதுவரை 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை சிறப்பு புலனாய்வுக்குழு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் வீரமணியை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் குழுவினர் மனு தாக்கல் செய்தனர்.இந்த மனு நீதிபதி எஸ். பத்மா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வீரமணி தரப்பில் ஆஜரானவர்கள், சம்பந்தப்பட்ட வழக்கில் ஏற்கெனவே விரிவான விசாரணை நடத்தப்பட்டுவிட்டதால், மேலும் போலீஸ் காவல் வழங்கக் கூடாது என வாதிட்டனர்.
Advertisement
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜெம் வீரமணியை 2 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழுவுக்கு அனுமதி வழங்கினார்.இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி புழல் சிறையில் வைத்து வீரமணியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணை நிறைவடைந்ததும், அவரை சனிக்கிழமை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, அவர் மீது முதலில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில், ஏற்கெனவே 3 நாட்கள் போலீசார் விசாரணை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.