கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை பரவலாகப் பெய்து வருகிறது. இதனால் பில்லூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 6,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால், பவானி ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், மேட்டுப்பாளையம் அருகே உள்ள குத்தாரிபாளையம் பகுதியில் பவானி ஆற்றில் முதலை ஒன்று தென்பட்டது. வெள்ள நீரில் அடித்து வரப்பட்டதாகக் கூறப்படும் அந்த முதலை, ஆற்றின் நடுவே இருந்த பாறை ஒன்றின் மீது படுத்திருந்தது.
Advertisement
ஆற்றில் குளிக்கச் சென்ற பொதுமக்கள் முதலையைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். ஆற்றில் முதலை நடமாட்டம் இருப்பதால் அச்சமடைந்துள்ள அவர்கள், அந்த முதலையைப் பாதுகாப்பாகப் பிடித்து அப்புறப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.