காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் ஏகனாபுரம் பகுதிகளில் சென்னைக்கான 2-வது விமான நிலையம் அமைக்க மத்திய அரசுடன் இணைந்து முந்தைய தி.மு.க. அரசு திட்டமிட்டது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே, த.வெ.க. ஆட்சி அமைந்த பின்னர் பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக முதல்-அமைச்சர் விஜய் சட்டசபையில் அறிவித்தார். இதனால், விமான நிலையத்திற்காக திட்டமிடப்பட்ட பகுதிகள் இனி எதற்காக பயன்படுத்தப்படும் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், பரந்தூர் அருகே உள்ள மதுரமங்கலத்தில் சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்காக நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தொழில்துறை வளர்ச்சியுடன் செமிகண்டக்டர்களுக்கான தேவை அதிகரித்து வரும் சூழலில், இத்துறையில் பெரிய அளவிலான முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. மதுரமங்கலத்தில் சிப்காட் சார்பில் ரூ.175 கோடி செலவில் செமிகண்டக்டர் மற்றும் மின்னணு உற்பத்திப் பூங்கா அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான சுற்றறிக்கையை நில நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி வெளியிட்டுள்ளார். அந்த சுற்றறிக்கையில், தொழில் பயன்பாட்டுக்காக 8.3820 ஹெக்டேர் நிலம் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கையகப்படுத்தப்பட உள்ள நிலங்கள் தரிசு நிலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றில் வேம்பு மற்றும் தென்னை மரங்கள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நிலங்கள் தொடர்பான திட்ட வரைபடங்கள் மாவட்ட வருவாய் சிறப்பு அலுவலர் மற்றும் சிறப்பு வட்டாட்சியர் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
Advertisement
அலுவலக வேலை நாட்களில் எந்த நேரத்திலும் அவற்றை பார்வையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய சிப்காட் பூங்காவில் செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைகளுடன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வசதிகளும் இடம்பெறும் என்று அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்தத் திட்டத்தின் மூலம் 5 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தமிழகத்தின் மின்னணு மற்றும் செமிகண்டக்டர் தொழில்துறை சூழலியலுக்கு இந்தத் திட்டம் குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரமங்கலத்தில் 166.31.50 ஹெக்டேர் பட்டா நிலம், அதாவது 410.80 ஏக்கர், கையகப்படுத்தவும், 4.67.50 ஹெக்டேர், அதாவது 11.55 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தின் உரிமையை மாற்றவும், அங்கு புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கவும் தமிழக அரசு ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக தமிழ்நாடு தொழிலியல் நோக்கங்களுக்கான நில எடுப்பு சட்டத்தின் கீழ் கடந்த 5.2.2024 அன்று அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. தனிநபர் பேச்சுவார்த்தை மூலம் நிலங்களை கையகப்படுத்துவது, நில எடுப்பு பணிகளுக்காக புதிய பணியிடங்களை உருவாக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு நிர்வாக அனுமதியும் நிதி ஒப்பளிப்பும் அந்த உத்தரவில் வழங்கப்பட்டிருந்தது.