பதிவுத்துறையில் ஆன்லைன் பத்திரப்பதிவு திட்டம்: முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்
தமிழ்நாட்டில் மனைப்பிரிவில் முதல் மனை விற்பனை மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்பில் முதல் வீடு விற்பனை தொடர்பான ஆவணங்களை, இனி இணையவழியிலான வருகையில்லா ஆவணப்பதிவு முறையில் மட்டுமே பதிவு செய்யும் நடைமுறையை முதல்-அமைச்சர் விஜய் இன்று (17.8.2026) தொடங்கி வைத்தார்.சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.பதிவு அலுவலகங்களுக்கு பொதுமக்கள் நேரில் செல்ல வேண்டிய அவசியத்தை குறைக்கும் வகையில், ஏற்கனவே இணையவழியில் ஆவணங்களைப் பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எங்கிருந்தும், எந்த நேரத்திலும் பதிவுத்துறை இணையதளம் வாயிலாக ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும்.தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வருகையில்லா ஆவணப்பதிவு முறையில், மனைப்பிரிவில் முதல் மனை மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்பில் முதல் வீடு விற்பனை தொடர்பான ஆவணங்களை சார்பதிவாளர் அலுவலகத்துக்குச் செல்லாமல் பதிவு செய்யலாம்.இந்த முறையில் பதிவுசெய்ய, பதிவுத்துறை இணையதளத்தில் பொதுமக்கள் தங்களுக்கான உள்நுழைவை உருவாக்கி ஆவணங்களை இணையவழியில் சமர்ப்பிக்க வேண்டும். ஆவணத்தை எழுதிக் கொடுப்பவர், பெறுபவர் மற்றும் சாட்சிகள் என அனைவரின் ஆதார் அட்டையும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். மேலும், ஆதார் ஆணையத்தின் மூலம் கைரேகை அல்லது கருவிழிப் படலம் அடிப்படையில் ஆதார் சரிபார்ப்பு மேற்கொள்ளப்படும்.இதற்காக இணைய இணைப்பு, UIDAI அங்கீகரித்த எல்1 வகை கைரேகை சாதனம், கருவிழிப் படலம் ஸ்கேன் செய்யும் கருவி, புகைப்படம் எடுக்க நீலநிறப் பின்னணி மற்றும் வெப்கேம் உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகள் தேவைப்படும்.இணையவழியில் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களை சார்பதிவாளர்கள் 24 மணி நேரத்துக்குள் பரிசீலித்து பதிவு செய்ய வேண்டும். தேவையான திருத்தங்கள் இருந்தால் ஆவணத்தைத் திருப்பி அனுப்பலாம் அல்லது சட்ட விதிகளின்படி நிராகரிக்கலாம். வழக்கமான நடைமுறையைப் போலவே ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே பதிவு செய்யப்படும்.திருத்தத்துக்காக திருப்பி அனுப்பப்படும் ஆவணங்களை, அவை திருப்பி அனுப்பப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் தேவையான மாற்றங்களுடன் மீண்டும் சமர்ப்பிக்கலாம்.
பதிவு முடிந்ததும், சார்பதிவாளர் டிஜிட்டல் கையொப்பமிட்ட ஆவணம் பயனரின் உள்நுழைவுப் பகுதியில் கிடைக்கும்.
அதை 60 நாட்களுக்குள் தேவையான எண்ணிக்கையில் பதிவிறக்கம் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. 60 நாட்களுக்குப் பிறகு, வழக்கமான நடைமுறையில் சான்றிட்ட நகலுக்கு விண்ணப்பித்து ஆவணத்தைப் பெறலாம்.பதிவு செய்யப்பட்ட ஆவணத்தின் பதிவுச் சான்றுரை ஒவ்வொரு முறையும் மாறுபடும் வகையில் ஐந்து நிறங்களைக் கொண்ட தானியங்கி சீரற்ற நிற அமைப்பில் அச்சிடப்படும். சான்றிட்ட நகல் கோரும்போது கருப்பு-வெள்ளை நகல் மட்டுமே வழங்கப்படும். அதேவேளையில், அசல் நிறத்திலான டிஜிட்டல் நகல் 60 நாட்கள் வரை பயனரின் உள்நுழைவில் இருக்கும். இதன் மூலம் அசல் ஆவணத்தின் பதிவுச் சான்றுரையில் உள்ள நிற அமைப்பை உரிமையாளர் அறிந்துகொள்ள முடிவதுடன், போலி ஆவணங்கள் உருவாக்கப்படுவதையும் தடுக்கும் கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.மேலும், ஆவணத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் QR குறியீடு இடம்பெறும். அதில் ஆவண எண், ஆவணத்தின் தன்மை மற்றும் பதிவு செய்யப்பட்ட தேதி உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். பதிவு அலுவலர் டிஜிட்டல் கையொப்பமும் இடுவார்.காகித ஆவணத்தில் பின்னர் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டிருந்தால், அதை டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட ஆவணத்துடன் ஒப்பிட்டு கண்டறிய முடியும். டிஜிட்டல் ஆவணத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தால், டிஜிட்டல் கையொப்பத்தைச் சரிபார்க்கும்போது “X” குறியீடு தோன்றும்.பொதுமக்களுக்கு எளிமையான சேவையை வழங்குவதுடன், பதிவு நடைமுறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில், மனைப்பிரிவில் முதல் மனை விற்பனை மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்பில் முதல் வீடு விற்பனை தொடர்பான ஆவணங்களுக்கு வருகையில்லா ஆவணப்பதிவு முறையை கட்டாயமாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன், வணிகவரி, பதிவுத்துறை மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் ஜெ.குமரகுருபரன், பதிவுத்துறைத் தலைவர் ஜி.கே.அருண் சுந்தர் தயாளன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.