பிச்சை எடுத்தால் எவ்வளவு பணம் கிடைக்கும்? சோதித்து பார்க்க களமிறங்கிய யூடியூபர்-எவ்வளவு கிடைத்தது தெரியுமா?
பிச்சை எடுத்தால் ஒரு நாளில் எவ்வளவு பணம் கிடைக்கும் என்பதை அறிந்துகொள்ள, பிரபல யூடியூபர் ஒருவர் வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். முழு நாளும் பிச்சை எடுக்காமல், சில மணி நேரம் மட்டும் மேற்கொண்ட இந்த சோதனையில் கிடைத்த தொகை அவர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.யூடியூபர் புருஷோத்தம் விஷிஸ்த் தனது நண்பர் சச்சினுடன் இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டார். இதற்காக இருவரும் ஹரித்வாரில் உள்ள சிவன் கோயிலுக்கு திருவிழா நாளில் சென்றனர். அங்கு சச்சின் பிச்சைக்காரர் வேடமிட்டு பணம் கேட்கத் தொடங்கினார்.சாதாரணமாக இல்லாமல், ‘ஹைடெக் பிச்சைக்காரர்’ என்ற வகையில் இந்த முயற்சி நடத்தப்பட்டது. சச்சின் தனது கழுத்தில் கியூஆர் கோடு ஒன்றைத் தொங்கவிட்டிருந்தார். பிச்சைக்காரர் தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அழுக்கான, கிழிந்த ஆடைகளை அணிந்ததுடன், முகத்திலும் அழுக்கை பூசிக்கொண்டார்.இந்த முயற்சியின் மூலம் ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை கிடைக்கும் என இருவரும் முதலில் எதிர்பார்த்துள்ளனர்.
ஆனால் சுமார் 8 மணி நேரத்தில் மொத்தம் ரூ.4,000 கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒருவர் இதே அளவிலான தொகையை தினமும் சம்பாதித்தால், ஒரு மாதத்தில் சுமார் ரூ.1.2 லட்சம் வரை வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளதாக புருஷோத்தம் கூறியுள்ளார். அதேநேரத்தில், தொடர்ந்து பலரிடம் சென்று பிச்சை கேட்பது உடல் மற்றும் மன ரீதியாக கடினமான அனுபவமாக இருந்ததாக இருவரும் தெரிவித்துள்ளனர். நாள் முழுவதும் இதுபோன்று ஈடுபடுவது அதிக சோர்வை ஏற்படுத்தியதாகவும் அவர்கள் கூறினர்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், 8 மணி நேரத்தில் ரூ.4,000 கிடைத்தது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மத வழிபாட்டு தலங்கள் மற்றும் சுற்றுலா பகுதிகளில் பிச்சை எடுப்பது சிலருக்கு வாழ்வாதாரமாக மாறியிருக்கிறதா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.அதேவேளையில், ஒரே ஒரு நாள் நடத்தப்பட்ட இந்த சோதனையின் முடிவை வைத்து, பிச்சையை நம்பி வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை முழுமையாக புரிந்துகொள்ள முடியாது என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.