நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயாராக உள்ளது: கிரண் ரிஜிஜு
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதன் காரணமாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தொடர் அமளி ஏற்பட்டுள்ளதால், அவை நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.இன்றும் காலை மக்களவை கூடியவுடன், எதிர்க்கட்சிகள் நீட் வினாத்தாள் கசிவு பிரச்சினையை முன்வைத்து முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.இந்த சூழலில், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து மக்களவையில் விரிவான விவாதம் நடத்த அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.இதுகுறித்து அவர் கூறியதாவது: “மாணவர்களின் நலனுக்கே அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான விவகாரத்தை மக்களவையில் விரிவாக விவாதிக்க அரசு முழுமையாக தயாராக உள்ளது” என்றார்.இதற்கிடையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது போலீசார் எடுத்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.
மேலும், இந்த விவகாரம் குறித்து பிரதமர் நேரடியாக நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.எதிர்க்கட்சிகளின் சார்பில் பேசிய சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், செவ்வாய்க்கிழமை பிரதமரின் இல்லம் முன்பு நடைபெற்ற தர்ணா போராட்டத்தை சுட்டிக்காட்டி, “பிரதமர் நாடாளுமன்றத்தில் பேசாததால்தான் அவரது இல்லம் முன்பு போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது” என்று கூறினார்.அத்துடன், “இளைஞர்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வெளியே கருத்து தெரிவிக்கிறார். அதே விஷயத்தில் மக்களவையிலேயே ஏன் அறிக்கை அளிக்க முடியாது?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இதனால் அவையில் தொடர்ந்து அமளி நிலவியது.