'நீட்' வினாத்தாள் கசிவு எதிரொலி: தேர்வு முறைகேடுகளுக்கு கடும் தண்டனை வழங்கும் மசோதா இன்று மக்களவையில்
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் அரசியல் மட்டத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரும், எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், இனி பொதுத் தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெறாத வகையில் கடுமையான சட்டம் கொண்டு வரப்படும் என்று பிரதமர் மோடி கடந்த 23-ஆம் தேதி வெளியிட்ட காணொலியில் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, கடந்த 24-ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புதிய சட்டத் திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
2024-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 'பொதுத் தேர்வுகள் முறைகேடுகளைத் தடுத்தல்' சட்டம், பல்வேறு திருத்தங்களுடன் 'பொதுத் தேர்வுகள் (முறைகேடுகளைத் தடுத்தல்) சட்டம்–2026'என்ற பெயரில் மாற்றப்படுகிறது.இந்த புதிய மசோதாவின் படி, தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கும் வகையில் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த முக்கிய மசோதா இன்று (திங்கட்கிழமை) மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
மேலும், அதே நாளில் விவாதித்து நிறைவேற்றவும் அரசு வலியுறுத்துகிறது. பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் இந்த மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தி, அதை நிறைவேற்ற முன்மொழிவார் என்று மக்களவை அலுவல் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.