தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே, சுடுகாட்டில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை அடித்துக்கொலை செய்ததாக அவரது நண்பர்கள் இருவரை போலீசார் தேடி வருகின்றனர். சாம்பவர்வடகரை இல்லத்தார் தெருவைச் சேர்ந்த சத்தியன் (35), கேரளாவில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்தார். அவரது நண்பர்களான மாதாகோவில் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி (35), உலைக்கூட தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் (35) ஆகியோரில், சுப்பிரமணியனும் கேரளாவில் கூலித்தொழில் செய்து வந்தார். கருப்பசாமி உள்ளூரில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சத்தியனும் சுப்பிரமணியனும் 2 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தனர். நேற்று மாலை மூவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சாம்பவர்வடகரை மெயின் ரோட்டில் உள்ள சுடுகாட்டு நிழல்தாங்கலுக்கு சென்றனர். அங்கு அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.
Advertisement
அப்போது மதுபோதையில் மூவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில், சுப்பிரமணியனும் கருப்பசாமியும் சேர்ந்து சத்தியனை கைகளால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சத்தியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து சுப்பிரமணியனும் கருப்பசாமியும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். சம்பவம் குறித்து சாம்பவர்வடகரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்து சென்ற போலீசார் சத்தியனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய சுப்பிரமணியன் மற்றும் கருப்பசாமி ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். சுடுகாட்டில் தொழிலாளி அவரது நண்பர்களாலேயே அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.