சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள குஞ்சாண்டியூரைச் சேர்ந்தவர் பத்மராஜன் (65). பழைய லாரி மற்றும் பஸ் டயர்களை புதுப்பிக்கும் தொழில் செய்து வரும் இவர், தேர்தல்களில் தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்து வருபவர் என்ற தனிச்சிறப்பைப் பெற்றுள்ளார். கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடிக்க வேண்டும் என்ற நோக்கில், கடந்த 1988-ம் ஆண்டு முதல் பல்வேறு தேர்தல்களில் தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார். இதுவரை 38 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நடைமுறையைத் தொடர்ந்து வரும் பத்மராஜன், இந்திய அளவில் பல முக்கிய அரசியல் தலைவர்களை எதிர்த்து தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். கருணாநிதி, ஜெயலலிதா, வாஜ்பாய், நரேந்திர மோடி, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுக்கு எதிராகவும் அவர் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்.
Advertisement
கூட்டுறவு சங்கத் தேர்தல் தொடங்கி ஜனாதிபதி தேர்தல் வரை பல்வேறு தேர்தல்களில் போட்டியிட முயற்சி செய்துள்ளதால், அவர் ‘தேர்தல் மன்னன்’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். அவரது தேர்தல் சாதனைகள் லிம்கா புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று புதன்கிழமை தொடங்கியுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட பத்மராஜன் தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தாக்கல் செய்தார். இது அவரது 256-வது வேட்புமனு தாக்கல் ஆகும். இதுவரை தேர்தல்களில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சுமார் ரூ.1 கோடி வரை செலவு செய்துள்ளதாக பத்மராஜன் தெரிவித்துள்ளார்.