தவெகவில் இணைய ஓ.பன்னீர்செல்வம் முடிவு: விரைவில் எம்.எல்.ஏ. பதவி ராஜினாமா
தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், முன்னாள் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட கருத்து மோதலைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, அ.தி.மு.க.வில் இருந்து விலகிய அவர், கே.ஏ.செங்கோட்டையன் சென்ற வழியில் தவெகவில் இணையலாம் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. அவரது மகன் ரவீந்திரநாத்தும் இதே விருப்பத்தை கொண்டிருந்ததாக கூறப்பட்டது.இதற்கிடையில், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க., ஓ.பன்னீர்செல்வத்தை தங்கள் அணியில் இணைத்துக்கொண்டது. ஆனால், எதிர்பாராத வகையில் சட்டமன்ற தேர்தலில் தவெக ஆட்சியை கைப்பற்றியதால், தி.மு.க. எதிர்க்கட்சியாக மாறியது.கடந்த பிப்ரவரி மாதம் தி.மு.க.வில் இணைந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு இதுவரை எந்த முக்கிய பொறுப்பும் வழங்கப்படவில்லை. மேலும், தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தனது அரசியல் பயணம் குறித்து அவர் ஆலோசித்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த சூழலில், தற்போதைய அரசியல் நிலவரத்தை கருத்தில் கொண்டு தவெகவில் இணைவது சரியான முடிவாக இருக்கும் என ரவீந்திரநாத் தனது தந்தையிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ஓ.பன்னீர்செல்வமும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.இதனைத் தொடர்ந்து, தவெக பொதுச் செயலாளரும் அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆகியோருடன் ரவீந்திரநாத் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அமைச்சர்கள் இருவரும் ஓ.பன்னீர்செல்வத்தின் விருப்பத்தை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யிடம் தெரிவித்ததாகவும், அவரும் இதற்கு ஒப்புதல் அளித்ததாகவும் கூறப்படுகிறது.