தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜயின் அலுவலகம் மாற்றப்படுமா? வெளியான தகவல்கள்
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வரும் தமிழக தலைமைச்செயலகத்தில், முதல்-அமைச்சர் விஜயின் அலுவலகம் மற்றும் அறையை புதிய இடத்திற்கு மாற்றுவது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.காமராஜர் சாலையில் அமைந்துள்ள தலைமைச்செயலகத்தின் முதல் தளத்தில்தான் தற்போது முதல்-அமைச்சரின் அறை மற்றும் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அதே கட்டிடத்தில் அமைச்சர்களின் அலுவலகங்கள், சட்டப்பேரவை கூட்ட அரங்கம், தலைமைச் செயலாளர் மற்றும் பல்வேறு துறை செயலாளர்களின் அலுவலகங்கள், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலகம், நூலகம் உள்ளிட்ட முக்கிய நிர்வாக பிரிவுகளும் இயங்கி வருகின்றன.முதல்-அமைச்சர் விஜயை சந்திப்பதற்காக அரசியல் தலைவர்கள், தொழில்துறை பிரதிநிதிகள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் தினமும் தலைமைச்செயலகத்திற்கு வருவதால், தற்போதைய அலுவலகத்தில் இடவசதி குறைபாடு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சந்திப்புகளின் போது சிரமங்கள் ஏற்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதையடுத்து, கோட்டை வளாகத்துக்கு அருகில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு முதல்-அமைச்சரின் அலுவலகத்தை மாற்றும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.