வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘அர்னாப்’ புயலைத் தொடர்ந்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும், கடலுக்குச் சென்ற மீனவர்கள் உடனடியாகக் கரை திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வங்கக்கடலில் முதலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவான வானிலை அமைப்பு, பின்னர் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றது. தொடர்ந்து, மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக உருவெடுத்தது. இந்தப் புயலுக்கு ‘அர்னாப்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (செவ்வாய்க்கிழமை) தீவிரப் புயலாகவும், மிகத் தீவிரப் புயலாகவும் வலுப்பெறக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
தொடர்ந்து, நாளை மறுநாள் ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. புயலின் தாக்கத்தால் ஆந்திரப் பகுதியில் மழை பெய்வதற்கான சூழல் நிலவுகிறது. அதேவேளையில், இந்த வானிலை நிகழ்வின் காரணமாகத் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும், தமிழகத்தில் இதுவரை பெய்த மழைக்கும் இந்தப் புயலுக்கும் தொடர்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகப்பட்டினம், பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலுக்குச் சென்றுள்ள மீனவர்கள் விரைந்து கரை திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.