ஜம்முவில் விடிய விடிய பெய்த கனமழை; வெள்ளப் பாதிப்பில் உயிரிழப்பு 17 ஆக அதிகரிப்பு
ஜம்மு-காஷ்மீரில் தொடர்ச்சியாக பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரின் ராஜவுரி மாவட்டத்தில் முதலில் பெய்த கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்தச் சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்ததுடன், பல வாகனங்கள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டன. இதையடுத்து நூற்றுக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்த்தப்பட்டனர்.இந்நிலையில், இரவு முழுவதும் நீடித்த கனமழையால் ஆறுகள் மற்றும் சிற்றோடைகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கின. பல சாலைகள் சேதமடைந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வெள்ளத்தில் சிக்கிய வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்தச் சூழலில், வெள்ளப் பாதிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 17 ஆக உயர்ந்துள்ளது.மீட்புப் படையினர், காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.மேலும், கனமழை தொடரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், அவசியமில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளனர்.இதற்கிடையில், ஜம்மு-காஷ்மீரின் பல பகுதிகளில் கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக பாதிப்புகள் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலைமையை அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மேலும், பாதிப்பு குறித்து ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மற்றும் முதல் மந்திரியுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசியில் பேசி நிலவரத்தை கேட்டறிந்தார். தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.