தமிழ்நாட்டில் சேவல் சண்டைக்கு தடை விதித்து சுற்றறிக்கை வெளியிட டி.ஜி.பி.க்கு எந்த அதிகாரம் உள்ளது என சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் சேவல் சண்டை நடத்துவதற்கு தடை விதித்து டி.ஜி.பி. கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுற்றறிக்கை ஒன்றை பிறப்பித்திருந்தார். இதை எதிர்த்து, ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கோவில் திருவிழாக்களின் போது சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கக் கோரி ஈரோட்டைச் சேர்ந்த ஆர்.அருண்குமார் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில், கிராமங்களில் நடைபெறும் திருவிழாக்களில் ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை, ரேக்ளா பந்தயம் உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம் என குறிப்பிடப்பட்டுள்ளது. போலீசார் விதிக்கும் நிபந்தனைகளை பின்பற்றி, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இப்போட்டிகள் நடத்தப்படுவதாகவும், இதில் சூதாட்டம் நடைபெறுவதில்லை என்றும் மனுதாரர் கூறியுள்ளார்.மேலும், சேவல் சண்டையின்போது விலங்குகள் துன்புறுத்தப்படுவதில்லை என்றும் தெரிவித்து, சேவல் சண்டைக்கு தடை விதித்து டி.ஜி.பி.
Advertisement
பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்து, போட்டிகளை நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், மிருக வதை தடை சட்டம் மற்றும் சென்னை ஐகோர்ட்டு, மதுரை ஐகோர்ட்டு அமர்வு பிறப்பித்த பல்வேறு உத்தரவுகளின் அடிப்படையிலேயே சேவல் சண்டைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.மேலும், இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் நிலுவையில் இருப்பதாகவும், தற்போதைய மனுவுக்கு பதிலளிக்க 2 வார கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அரசுத் தரப்பில் கோரப்பட்டது.ஆனால், இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, தமிழ்நாட்டில் சேவல் சண்டைக்கு தடை விதித்து சுற்றறிக்கை வெளியிட டி.ஜி.பி.க்கு என்ன அதிகாரம் உள்ளது என கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக போலீசார் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வருகிற 7-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.