சென்னை: மதுபோதையில் ரகளை செய்த இளம்பெண் மீது பொதுமக்கள் தாக்குதல்
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் மதுபோதையில் பொதுமக்களிடம் தகாத வார்த்தைகளில் பேசி தகராறில் ஈடுபட்ட இளம்பெண்ணை போலீசார் மீட்டு, அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.திருவல்லிக்கேணி டாக்டர் நடேசன் சாலையில் உள்ள உணவகத்திற்கு இளம்பெண் ஒருவர் தனது காதலனுடன் வியாழக்கிழமை இரவு சென்றுள்ளார். அப்போது அவர் அதிக மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. உணவகத்தில் இருந்தபோதும், பின்னர் சாலையில் சென்றபோதும் அப்பகுதியில் இருந்த பொதுமக்களிடம் அந்த இளம்பெண் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி தகராறில் ஈடுபட்டுள்ளார்.அதுமட்டுமின்றி, அந்த வழியாக வந்த கார் ஒன்றையும் அவர் காலால் எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், இளம்பெண்ணைச் சூழ்ந்து அவரது செயல்கள் குறித்து கேள்வி எழுப்பினர்.இதையடுத்து இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில், அங்கிருந்த ஒருவர் இளம்பெண்ணின் தலையில் பலமுறை தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இச்சம்பவத்தை அங்கிருந்த சிலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். பின்னர் அந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின.இதுகுறித்து தகவல் அறிந்த ஐஸ் ஹவுஸ் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பொதுமக்கள் மத்தியில் இருந்த இளம்பெண்ணை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.தொடர்ந்து அவரது பெற்றோரை காவல் நிலையத்திற்கு வரவழைத்த போலீசார், அவர்களுக்கு அறிவுரையும் எச்சரிக்கையும் வழங்கினர். பின்னர் இளம்பெண்ணை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.