செங்கோட்டை செல்லும் ரெயில்கள் இன்று முதல் 3 நாட்கள் பகுதியாக ரத்து
தென்காசி மாவட்டம் இலஞ்சி பகுதியில் ரெயில்வே மேம்பாலப் பணிகள் நடைபெற உள்ளதால், தென்காசி–செங்கோட்டை வழித்தடத்தில் சில ரெயில்களின் சேவை இன்று முதல் 3 நாட்களுக்கு பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.குத்துக்கல்வலசையில் இருந்து குற்றாலம் செல்லும் சாலையின் குறுக்கே தென்காசி–செங்கோட்டை ரெயில் பாதையும், ரெயில்வே கேட்டும் இருந்தன. ரெயில்வே கேட் மூடப்படும் நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், தமிழ்நாடு அரசு மற்றும் ரெயில்வே துறை இணைந்து சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணியை தொடங்கின.மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பிலான பாலப்பணி நிறைவடைந்துவிட்டது. ஆனால் ரெயில் தண்டவாளத்தின் மேற்பகுதியில் பாலத்தை இணைக்கும் பணி மட்டும் இதுவரை முடியாமல் இருந்தது.இதற்காக ரெயில்வே ஒப்பந்த நிறுவனம் தேவையான இரும்பு கிர்டர்களை கொண்டு வந்து, பாலத்தின் அருகே வரிசையாக வைத்திருந்தது. தனித்தனியாக இருந்த கிர்டர்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு, பொருத்துவதற்கு தயார்படுத்தப்பட்டுள்ளன.இந்த கிர்டர்களை கான்கிரீட் தூண்களின் மீது தூக்கி பொருத்தி இணைக்கும் பணியும், அதனைத் தொடர்ந்து கான்கிரீட் அமைக்கும் பணியும் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது.
இந்தப் பணிகள் 31-ந்தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற உள்ளன.இதன் காரணமாக தென்காசி–செங்கோட்டை இடையே சில ரெயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
ரத்து மற்றும் மாற்றப்பட்ட ரெயில் சேவைகள்:
* செங்கோட்டையில் இருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்படும் செங்கோட்டை–நெல்லை பாசஞ்சர் ரெயில் (56776), செங்கோட்டை–தென்காசி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் தென்காசியில் இருந்து தொடர்ந்து இயக்கப்படும்.
* நெல்லையில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்படும் நெல்லை–செங்கோட்டை பாசஞ்சர் ரெயில் (56773), தென்காசி வரை மட்டுமே இயக்கப்படும். தென்காசி–செங்கோட்டை இடையிலான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
* மதுரையில் இருந்து காலை 7.25 மணிக்கு புறப்படும் செங்கோட்டை பாசஞ்சர் ரெயில் (56771)**, தென்காசி வரை மட்டுமே இயக்கப்படும்.
* செங்கோட்டையில் இருந்து மதியம் 12.20 மணிக்கு புறப்படும் மதுரை பாசஞ்சர் ரெயில் (56772), செங்கோட்டை–தென்காசி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் தென்காசியில் இருந்து வழக்கமான மதியம் 12.33 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு செல்லும்.
இந்த ரெயில் சேவை மாற்றங்கள் குறித்து தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது.