சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து விலக முடிவு
தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட சில எம்.எல்.ஏ.க்கள், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை எதிர்த்து கருத்து தெரிவித்தனர். இதனால் கட்சியில் உள்கட்டமைப்பு பிரச்சினை உருவாகி, பின்னர் அது சமரசமாக முடிவுக்கு வந்தாலும், சி.வி. சண்முகம் தனித்த அணியாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்த சி.வி. சண்முகத்துக்கு பதிலாக பசுபதி நியமிக்கப்பட்டார். இதையடுத்து, மாவட்டத்தில் சி.வி. சண்முகம் மற்றும் பசுபதி தலைமையில் இரு தனித்தனி அணிகள் செயல்பட்டு வருவதுடன், இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகளும் மோதல்களும் ஏற்பட்டுவருகின்றன.சமீபத்தில் நாட்டார்மங்கலத்தில் பசுபதி தலைமையில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தின்போது, இரு அணியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் மாவட்ட அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதனைத் தொடர்ந்து, சி.வி. சண்முகத்திற்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறப்படும் 11 நிர்வாகிகளை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்தார். இதில் மாவட்ட இணைச் செயலாளர் ஆனந்தி, மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஜெயப்பிரகாஷ், அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.இந்தச் சூழலில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 500-க்கும் அதிகமானோர் அதிமுகவில் இருந்து விலக தீர்மானித்துள்ளனர். இதற்காக அவர்கள் சென்னை சென்று, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் தங்களது விலகல் கடிதத்தை வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் கிளை நிர்வாகிகள் பேருந்துகள் மற்றும் கார்களில் சென்னை நோக்கி புறப்பட்டுள்ளனர்.முன்னதாக, சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்களில் சுமார் 300 பேர் தங்களது அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவார்கள் என்ற தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 10 காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபடுவது வழக்கம். தற்போது 3 உதவி ஆய்வாளர்கள் தலைமையில் 30 காவலர்கள் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவைச் சேர்ந்த பல நிர்வாகிகள் ஒரே நேரத்தில் விலக முடிவு செய்திருப்பது, அங்கு கட்சியின் அமைப்பு வலிமைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற அரசியல் மதிப்பீடுகள் வெளியாகியுள்ளன.