காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து கிடுகிடு உயர்வு
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் காவிரி ஆற்றின் குறுக்கே கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணை அமைந்துள்ளது. இந்த அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக குடகு மாவட்டம் உள்ளது. குடகு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கே.ஆர்.எஸ். அணைக்கு வரும் நீரின் அளவு வேகமாக அதிகரித்து வருகிறது.கடந்த 25-ம் தேதி அணைக்கு வினாடிக்கு 4,478 கனஅடி நீர் வந்த நிலையில், நேற்று முன்தினம் இந்த அளவு 9,438 கனஅடியாக உயர்ந்தது. நேற்று மேலும் அதிகரித்து, வினாடிக்கு 17,427 கனஅடி நீர் அணைக்கு வந்து கொண்டிருந்தது.மொத்தம் 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் நேற்று காலை 110.30 அடியாக பதிவானது. நேற்று முன்தினம் 108.63 அடியாக இருந்த நீர்மட்டம், ஒரே நாளில் சுமார் 2 அடி உயர்ந்துள்ளது.49.452 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட இந்த அணையில், நேற்று காலை நிலவரப்படி 31.770 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு இருந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 4,514 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது.இதனிடையே, மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டையில் அமைந்துள்ள கபினி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது.