கங்கையில் பிரியாணி சாப்பிட்ட வழக்கு: 14 பேர் 3 மாதங்கள் சிறையில் இருந்தது வேதனைக்குரியது – சுப்ரீம் கோர்ட் நீதிபதி
வாரணாசியில் கங்கை நதியில் பிரியாணி சாப்பிட்டதாக கைது செய்யப்பட்ட 14 இளைஞர்கள் மூன்று மாதங்கள் சிறையில் இருந்த சம்பவம் குறித்து, சுப்ரீம் கோர்ட் நீதிபதி உஜ்ஜல் புயான் கடும் வருத்தம் தெரிவித்துள்ளார்.கடந்த மார்ச் மாதம், ரமலான் நோன்பு திறப்பதற்காக சிலர் வாரணாசியில் கங்கை நதியில் படகில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவர்கள் சிக்கன் பிரியாணி சாப்பிட்டு, அதன் எலும்புகளை ஆற்றில் வீசியதால் இந்துக்களின் மத உணர்வுகள் புண்பட்டதாக சில இந்து அமைப்புகள் போலீசில் புகார் அளித்தன.இந்த புகாரின் அடிப்படையில் 14 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு வாரணாசி நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்த நிலையில், பின்னர் கடந்த மே மாதத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க உத்தரவிட்டது.மத்திய பிரதேசத்தின் போபாலில் நடைபெற்ற தேசிய சட்டப் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நாட்டின் கருத்துச் சுதந்திர நிலை குறித்து பேசிய சுப்ரீம் கோர்ட் நீதிபதி உஜ்ஜல் புயான், “கங்கை நதியில் சிக்கன் பிரியாணி சாப்பிடுவதைத் தடை செய்யும் எந்தச் சட்டமும் நாட்டில் இல்லை.
பிரியாணி சாப்பிடுவது குற்றமாக கருதப்பட முடியாது. குற்றமல்லாத ஒரு செயலுக்காக 14 பேரை கைது செய்து, மூன்று மாதங்கள் ஜாமீன் வழங்காமல் சிறையில் வைத்திருப்பது வேதனையளிக்கிறது” என்று கூறினார்.மேலும், அரசை விமர்சிப்பதும், அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளில் ஒன்றாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.