எங்களுக்குத் தகுதி பாடம் எடுக்க இவ்வளவு நீளமான கடிதம் தேவையா நயினார் அண்ணே? - மாணிக்கம் தாகூர் பதிலடி
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், தமிழர்களுக்கு எதிராக நீண்ட காலமாக செயல்பட்டு வரும் காங்கிரஸ் கட்சிக்கு, பாஜகவை விமர்சிக்கும் தகுதி இல்லை என்று தெரிவித்திருந்தார்.இந்தக் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்தப் பதிவில், நயினார் நாகேந்திரன் தனது கடிதத்தில் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு (CWRC), காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) குறித்து விரிவாக விளக்கியதைக் குறிப்பிட்ட அவர், இறுதியில் பாஜகவை விமர்சிக்க காங்கிரசுக்கு தகுதி இல்லை என்று கூறியிருப்பதாக தெரிவித்துள்ளார்.நீட் தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்களில் இளைஞர்களும் மாணவர்களும் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல், பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நாடாளுமன்றத்திற்கு வராமல் இருந்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.மேலும், காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் எப்போதும் தமிழக மக்களின் உரிமைக்காகவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் உறுதியாக செயல்பட்டு வருவதாகவும், மாநில நலனுக்கு எதிரான எந்த நடவடிக்கையையும் தொடர்ந்து எதிர்த்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வரும் சூழலில், சுதந்திர தினத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பாஜக எம்.பியும், கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியுமான பசவராஜ் பொம்மை தெரிவித்த கருத்தை நயினார் நாகேந்திரன் கவனித்தாரா என்றும் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் நீர்வரத்து குறைந்துள்ளதால், காவிரி அமைப்புகள் பரிந்துரைத்தபடி 12 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறக்க முடியாது என்றும், இந்த விவகாரத்தில் உடனடியாக உச்சநீதிமன்றத்தை நாட வேண்டும் என்றும், தீர்ப்பு வரும் வரை தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கக் கூடாது என்றும் பசவராஜ் பொம்மை தெரிவித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.தமிழகத்தின் உரிமைக்கு எதிராக செயல்படுபவர்கள் குறித்து கேள்வி எழுப்பாமல், காங்கிரசுக்கு தகுதி குறித்து பாடம் நடத்துவது ஏன் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், மறைமுக அரசியலில் இருந்து வெளியே வர வேண்டும் என்றும், மறைக்க முயற்சிக்கப்படும் பல விஷயங்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துவிட்டதாகவும் தனது பதிவில் மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டுள்ளார்.