இந்து சமய அறநிலையத்துறை செயல்பாடுகள் குறித்து அமைச்சர் ரமேஷ் தலைமையில் சீராய்வுக் கூட்டம்
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில், துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான சீராய்வுக் கூட்டம் அமைச்சர் சீ.ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் நல்லாட்சியில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறையின் திட்டங்கள், சட்டமன்றப் பேரவை அறிவிப்புகள், கோவில் திருப்பணிகள், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் மற்றும் பெருந்திட்ட வரைவு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களில் நடைபெற்று வரும் திருப்பணிகள், கிராமப்புற கோவில்களின் புனரமைப்பு பணிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள கோவில்களில் மேற்கொள்ளப்படும் திருப்பணிகள் ஆகியவை குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார். மேலும், கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்பது, முதுநிலை கோவில்களில் ஆன்மிகப் புத்தக விற்பனை நிலையங்களை அமைப்பது, பதவி உயர்வு, ஓய்வூதியம், கருணை அடிப்படையிலான பணி நியமனம், காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட நிர்வாக நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கோவில்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், மருத்துவ மையங்களை அமைத்தல், தீத்தடுப்பு நடவடிக்கைகள், இணையதளம் மூலம் கோவில் பிரசாதம் பெறுவதற்கான பதிவு வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகளின் நிலையும் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. இதனுடன், யானைகள் நலவாழ்வு முகாம், கோசாலை பராமரிப்பு, உலோகத் திருமேனிகள் பாதுகாப்பு மையங்கள், ஆன்மிக சுற்றுலா, அன்னதானத் திட்டம், ஒருகால பூசைத் திட்டம் ஆகியவை குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. கோவில்களில் காலியாக உள்ள பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர் பதவிகளை நிரப்புவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய அமைச்சர் ரமேஷ், அனைத்து கோவில்களிலும் நேர்மையான, வெளிப்படையான மற்றும் பொறுப்பான நிர்வாகம் உறுதி செய்யப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். கோவில் நிலங்கள் மற்றும் சொத்துகளில் ஆக்கிரமிப்பு, சட்டவிரோத பெயர் மாற்றம் அல்லது உரிமை கோரும் நடவடிக்கைகள் அனுமதிக்கப்படக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார். இதுபோன்ற முறைகேடுகள் கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன், காவல்துறையில் புகார் அளித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் உத்தரவிட்டார். கோவில் தொடர்பான வழக்குகள் நீதிமன்ற விசாரணைக்கு வரவிருந்தால், அவை குறித்த முழுமையான விவரங்களை முன்கூட்டியே தலைமையிடத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். உண்மைக்கு மாறான தகவல்கள் வெளியானால், உடனடியாக அதற்கு மறுப்பு தெரிவிக்கும் அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் அமைச்சர் கூறினார்.