சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில், துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான சீராய்வுக் கூட்டம் அமைச்சர் சீ.ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் நல்லாட்சியில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறையின் திட்டங்கள், சட்டமன்றப் பேரவை அறிவிப்புகள், கோவில் திருப்பணிகள், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் மற்றும் பெருந்திட்ட வரைவு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களில் நடைபெற்று வரும் திருப்பணிகள், கிராமப்புற கோவில்களின் புனரமைப்பு பணிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள கோவில்களில் மேற்கொள்ளப்படும் திருப்பணிகள் ஆகியவை குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார். மேலும், கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்பது, முதுநிலை கோவில்களில் ஆன்மிகப் புத்தக விற்பனை நிலையங்களை அமைப்பது, பதவி உயர்வு, ஓய்வூதியம், கருணை அடிப்படையிலான பணி நியமனம், காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட நிர்வாக நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கோவில்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், மருத்துவ மையங்களை அமைத்தல், தீத்தடுப்பு நடவடிக்கைகள், இணையதளம் மூலம் கோவில் பிரசாதம் பெறுவதற்கான பதிவு வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகளின் நிலையும் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. இதனுடன், யானைகள் நலவாழ்வு முகாம், கோசாலை பராமரிப்பு, உலோகத் திருமேனிகள் பாதுகாப்பு மையங்கள், ஆன்மிக சுற்றுலா, அன்னதானத் திட்டம், ஒருகால பூசைத் திட்டம் ஆகியவை குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. கோவில்களில் காலியாக உள்ள பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர் பதவிகளை நிரப்புவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய அமைச்சர் ரமேஷ், அனைத்து கோவில்களிலும் நேர்மையான, வெளிப்படையான மற்றும் பொறுப்பான நிர்வாகம் உறுதி செய்யப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். கோவில் நிலங்கள் மற்றும் சொத்துகளில் ஆக்கிரமிப்பு, சட்டவிரோத பெயர் மாற்றம் அல்லது உரிமை கோரும் நடவடிக்கைகள் அனுமதிக்கப்படக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார். இதுபோன்ற முறைகேடுகள் கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன், காவல்துறையில் புகார் அளித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் உத்தரவிட்டார். கோவில் தொடர்பான வழக்குகள் நீதிமன்ற விசாரணைக்கு வரவிருந்தால், அவை குறித்த முழுமையான விவரங்களை முன்கூட்டியே தலைமையிடத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். உண்மைக்கு மாறான தகவல்கள் வெளியானால், உடனடியாக அதற்கு மறுப்பு தெரிவிக்கும் அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் அமைச்சர் கூறினார். கோவில் நிலங்களை மீட்கும் நடவடிக்கைகளில் வனத்துறை மற்றும் வருவாய்த்துறையுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். கோவில்களில் தரிசன அனுமதி உள்ளிட்ட விதிமுறைகளில் முக்கிய மாற்றங்கள் செய்யப்படும் நிலையில், அது தொடர்பான தகவலை தலைமையிடத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும், குடமுழுக்கு போன்ற முக்கிய நிகழ்ச்சிகளில் தமிழுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். முக்கிய பிரமுகர்கள் கோவில்களுக்கு வருகை தரும்போது தலைமையிடத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்க எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தினார். கோவில்களில் கல்வெட்டுகள் அமைக்கும் போது அரசு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும், பொதுமக்களின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வரும் கோவில்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அன்னதானம் பெற வரும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்காத வகையில் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார். அனைத்து கோவில்களிலும் தூய்மை, பாதுகாப்பு மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். இதில் குறைபாடுகள் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். மேலும், அதிகாரிகள் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் கோவில்களுக்கு நேரில் சென்று நிர்வாகம், தூய்மை, பாதுகாப்பு மற்றும் பணியாளர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும் என்றும், முக்கியமான பிரச்சினைகள் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார். இதற்கு முன்னதாக, கோவில்களில் பணியாற்றியபோது பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 5 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை அமைச்சர் ரமேஷ் வழங்கினார். அதேபோல், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் இந்து சமய அறநிலையத்துறையில் உதவி பொறியாளர் மற்றும் உதவி ஸ்தபதி பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டு, தலைமையிடத்தில் பயிற்சி பெற்று வரும் 80 பேரையும் அமைச்சர் சந்தித்து, அர்ப்பணிப்புடன் பணியாற்றுமாறு அறிவுரை வழங்கினார். இந்த சீராய்வுக் கூட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறை அரசு செயலாளர் (கூடுதல் பொறுப்பு) வி.ராஜாராமன், துறை ஆணையர் டி.ஜி.வினய், கூடுதல் ஆணையர்கள் முனைவர் துரை ரவிச்சந்திரன், ரத்னா, ஜெயராமன், வான்மதி, சிவகுமார், மாரிமுத்து, தலைமை பொறியாளர் ப.மகாவிஷ்ணு உள்ளிட்ட துறை அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.