இங்கிலாந்தின் லண்டனில் இந்திய உணவு விடுதிக்கு தீ வைத்த சம்பவத்தில் தொடர்புடைய 17 வயது சிறுவர்கள் இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லண்டனின் கேன்ட்ஸ் ஹில் பகுதியில் ‘இந்தியன் அரோமா’ என்ற இந்திய உணவு விடுதி செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், திருடப்பட்ட காரில் வந்த ஒரு கும்பல், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் அந்த உணவு விடுதிக்குள் நுழைந்தது. அப்போது, அங்கு 8 பேர் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். விடுதியில் இருந்தவர்கள் யாரும் எழுந்து செல்லக்கூடாது என அந்த கும்பல் எச்சரித்தது.
Advertisement
பின்னர், சிலர் விடுதியின் கதவை மூடிய நிலையில், மற்றொருவர் அறை முழுவதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, கும்பலைச் சேர்ந்தவர்கள் வந்த காரிலேயே அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த தீ விபத்தில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த பலர் பலத்த காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு லண்டனில் உள்ள தி ஓல்டு பெய்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மைக்கேல் கிரீவ், சம்பவத்தில் தொடர்புடைய 17 வயது சிறுவர்கள் இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.