ஆவின் பால் தட்டுப்பாட்டை உடனடியாக தீர்க்க வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தல்
தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் ஆவின் பால் விநியோகம் குறைந்துள்ளதாக வெளியாகும் தகவல்கள் கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.சில பகுதிகளில் தினசரி 30 முதல் 50 லிட்டர் வரை பால் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பச்சை மற்றும் ஆரஞ்சு நிற ஆவின் பால் பாக்கெட்டுகள் கிடைப்பதில் சிக்கல் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் உள்ளிட்ட பாலை அன்றாட தேவையாக நம்பியிருக்கும் லட்சக்கணக்கான குடும்பங்கள் நேரடியாக பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.மேலும், அதிக கொழுப்பு சத்து கொண்ட ஆரஞ்சு பால் கேட்டவர்களுக்கு அதற்கு மாற்றாக நீல நிற பதப்படுத்தப்பட்ட பால் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பிரச்சினையை ஆவின் நிர்வாகம் உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்றும், இதில் தமிழக முதல்-அமைச்சர் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து ஆவின் ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.35 மட்டுமே கொள்முதல் விலையாக வழங்குவதாகவும், அதே நேரத்தில் தனியார் பால் நிறுவனங்கள் ரூ.50 வரை வழங்குவதால் ஆவினுக்கு தேவையான அளவில் பால் கிடைப்பதில் சிரமம் இருப்பதாக சில அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.அதேபோல், பால் கொள்முதல் விலையை உயர்த்தாமல், நெய் விலையை மட்டும் அதிகரித்திருப்பதையும் அவர் கண்டித்துள்ளார்.