ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வு: 1.08 லட்சம் பேர் மட்டுமே தேர்ச்சி
அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) சுமார் 1.10 லட்சம் பேர் தோல்வியடைந்துள்ளனர். தேர்வு எழுதிய 2.17 லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்களில் 1,08,326 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாகப் பணியாற்ற ஆசிரியர் தகுதித் தேர்வான டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியமாகும். இந்தச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளன. இதற்கிடையே, பணியில் இருக்கும் ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு ஆண்டுக்கு மூன்று சிறப்பு டெட் தேர்வுகளை நடத்துவதாக அறிவித்தது. அதன் ஒரு பகுதியாக, அரசு பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான சிறப்புத் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை மாதம் நடத்தியது.