அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி மறுப்பு: தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
தற்போது இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ரேவந்த் ரெட்டி, அங்கிருந்து அமெரிக்காவின் பாஸ்டன் நகருக்கு சென்று, பின்னர் வரும் 30-ம் தேதி ஐதராபாத் திரும்ப திட்டமிட்டிருந்தார். ஆனால், அவரது அமெரிக்க பயணத்துக்கு மத்திய அரசு அனுமதி மறுத்ததாக தெலங்கானா முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனால், அவர் வரும் 23-ம் தேதியே லண்டனில் இருந்து ஐதராபாத் திரும்புகிறார்.இதுதொடர்பாக முதல்வர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ரேவந்த் ரெட்டி தலைமையிலான அதிகாரப்பூர்வ குழு இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா செல்வதற்கு மாநில அரசு சார்பில் மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டது. இதில் இங்கிலாந்து பயணத்துக்கு மட்டும் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. குழு இங்கிலாந்து சென்ற பிறகே, அமெரிக்கா செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பயணத்துக்கு அரசியல் காரணங்களால் அனுமதி வழங்க முடியாது என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ரேவந்த் ரெட்டி தலைமையிலான குழு தனது அமெரிக்க பயணத்தை ரத்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.உலகின் முன்னணி கல்வி நிறுவனங்களை இந்தியா, குறிப்பாக தெலங்கானா மற்றும் ஐதராபாத்துக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதே இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாக இருந்ததாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்களிடமிருந்து கல்வி மற்றும் பயிற்சியை பெற வேண்டும் என்ற இளைஞர்களின் எதிர்பார்ப்புகளுக்கு தீர்வு காண முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.நாட்டின் வளர்ச்சியையும் இளைஞர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொள்ளும்போது, அரசியல் மற்றும் தேர்தல்களுக்கு அப்பாற்பட்டு சிந்திக்க வேண்டியது அவசியம் என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.