Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 13 அக்டோபர் 2026 | 27 புரட்டாசி பராபவ வருடம்

அதிமுக 55-வது ஆண்டு தொடக்க நாள்: நலத்திட்ட உதவிகள் வழங்க தலைமைக் கழகம் அறிவுறுத்தல்

அதிமுக 55-வது ஆண்டு தொடக்க நாள்: நலத்திட்ட உதவிகள் வழங்க தலைமைக் கழகம் அறிவுறுத்தல்

அதிமுகவின் 55-வது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு, கட்சி நிர்வாகிகள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என தலைமைக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அதிமுகவை நிறுவிய முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் வழியில் செயல்பட்டு வரும் இக்கட்சி, வரும் 17.10.2026 சனிக்கிழமையன்று தனது 55-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி, அன்று காலை 10.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகை வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். அங்கு நிறுவனர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்துவதுடன், கட்சிக் கொடியையும் ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கட்சியின் பல்வேறு சார்பு அணிகளின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் தற்போதைய மற்றும் முன்னாள் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement
மேலும், 55-வது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு, கட்சியின் அமைப்பு ரீதியான மாவட்டங்களுக்கு உட்பட்ட கிளைகள், வார்டுகள் மற்றும் வட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, கட்சிக் கொடிக் கம்பங்களுக்கு புதிய வண்ணம் பூசவும், கொடிக் கம்பங்கள் இல்லாத இடங்களில் புதிதாக அமைக்கவும், கட்சிக் கொடியை ஏற்றவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்க வேண்டும் என்றும், ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி தொடக்க நாளைக் கொண்டாட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டுமின்றி, அதிமுக அமைப்புகள் செயல்பட்டு வரும் பிற மாநிலங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி, கட்சியின் 55-வது ஆண்டு தொடக்க நாளை எழுச்சியுடன் கொண்டாட வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு