40-வது பிறந்தநாள் விழாவில் நிச்சயதார்த்தம்.. நீண்ட நாள் காதலியை திருமணம் செய்கிறார் உசைன் போல்ட்
உலகின் முன்னணி தடகள வீரரும், ‘உலகின் அதிவேக மனிதர்’ எனப் போற்றப்படுபவருமான உசைன் போல்ட், தனது 40-வது பிறந்தநாள் கொண்டாட்டத்திலேயே நீண்டகால காதலி காசி பென்னட்டிடம் திருமண விருப்பத்தைத் தெரிவித்து, நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
ஜமைக்காவின் கிங்ஸ்டன் நகரில் உள்ள ‘ஒன் பெல்மாண்ட்’ ஹோட்டலின் மேல்தளத்தில் கடந்த 21-ந்தேதி உசைன் போல்ட்டின் பிறந்தநாள் விழா விமரிசையாக நடைபெற்றது. குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கையில் மைக்ரோபோனுடன் திடீரென காசி பென்னட்டின் முன் மண்டியிட்ட போல்ட், அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.இந்த எதிர்பாராத தருணத்தால் காசி பென்னட் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார். பின்னர் மகிழ்ச்சியுடன் தனது சம்மதத்தை தெரிவித்தார். இதையடுத்து, பேரிக்காய் வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட 5 காரட் வைர மோதிரத்தை போல்ட், காசியின் விரலில் அணிவித்தார்.இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் இருவரும் இளம் பச்சை நிறத்தில் ஒரே மாதிரியான ஆடைகளை அணிந்திருந்ததும் கவனம் பெற்றது. இந்த மகிழ்ச்சியான தருணம் குறித்து காசி பென்னட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
போல்ட்டின் கைகளில் உணர்ச்சிவசப்பட்டு அழுதபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.உசைன் போல்ட் - காசி பென்னட் இருவரின் காதல் 2013-ம் ஆண்டு தொடங்கியது. 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டிகளின்போதுதான் இருவரும் தங்களது காதல் உறவை வெளிப்படையாக அறிவித்தனர். திருமணம் செய்து கொள்ளாமல் இணைந்து வாழ்ந்து வந்த இவர்களுக்கு, 6 வயதில் ஒலிம்பியா லைட்னிங் என்ற மகளும், 5 வயதில் தண்டர் மற்றும் செயின்ட் லியோ என்ற இரட்டை ஆண் குழந்தைகளும் உள்ளனர்.ஒலிம்பிக் போட்டிகளில் 8 தங்கப் பதக்கங்களை வென்று தடகள உலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்த உசைன் போல்ட், விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு குடும்ப வாழ்க்கையில் முக்கியமான புதிய கட்டத்தை எட்டியுள்ளார். இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு ரசிகர்களும் பிரபலங்களும் இருவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.