3 குழந்தைகளை கிணற்றில் தள்ளிக் கொன்ற தாய் தற்கொலை... குடும்பத் தகராறால் தர்மபுரியில் சோகம்
தர்மபுரி மாவட்டம் தடங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் பின்புறம் அமைந்துள்ள தோட்டக் கிணற்றில் நேற்று இரவு சுமார் 8 மணியளவில் உடல் ஒன்று மிதப்பதை அப்பகுதி மக்கள் கவனித்தனர். இதையடுத்து அவர்கள் அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொதுமக்கள், கிணற்றில் மேலும் மூன்று உடல்கள் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.பின்னர் போலீசாரும் தீயணைப்புத் துறையினரும் இணைந்து கிணற்றிலிருந்து நான்கு உடல்களையும் மீட்டனர். விசாரணையில், உயிரிழந்தவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி சரவணனின் மனைவி அம்சா (35), அவரது மகள்கள் ஜீவிதா (16), நவீனா (6) மற்றும் மகன் குமரன் (3) என்பது உறுதியானது.மீட்கப்பட்ட உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதுதொடர்பாக அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.போலீஸ் விசாரணையில், கடந்த 19-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 9 மணியளவில் அம்சாவுக்கும் அவரது கணவர் சரவணனுக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. வாக்குவாதத்திற்குப் பிறகு ஆத்திரமடைந்த அம்சா, தனது மூன்று குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.அம்சாவின் பெற்றோர் வீடு அதே ஊரில் இருப்பதால், அவர் அங்கு சென்றிருப்பார் என்று சரவணன் முதலில் நினைத்துள்ளார்.
ஆனால் நீண்ட நேரமாக அவர் மற்றும் குழந்தைகள் வீடு திரும்பாததால், அம்சாவின் பெற்றோரிடம் தொடர்புகொண்டு விசாரித்துள்ளார். அப்போது அவர்கள் அம்சா அங்கு வரவில்லை என்று தெரிவித்துள்ளனர்.இதையடுத்து இரு குடும்பத்தினரும் கடந்த இரண்டு நாட்களாக அம்சாவையும் குழந்தைகளையும் பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர். இந்த நிலையில், அம்சாவின் பெற்றோருக்குச் சொந்தமான தோட்டக் கிணற்றிலேயே நால்வரின் உடல்களும் மீட்கப்பட்டன.முதற்கட்ட விசாரணையில், அம்சா தனது மூன்று குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டு, பின்னர் தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும், சம்பவத்தின் அனைத்து கோணங்களிலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சோகச் சம்பவம் தர்மபுரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.