Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
புதன் | 09 செப்டம்பர் 2026 | 24 ஆவணி பராபவ வருடம்

2026 முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

2026 முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

சென்னை: 2026-2027ஆம் ஆண்டுக்கான முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இப்போட்டிகள், இந்த ஆண்டு பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளாக நடைபெறுகின்றன. தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் மாவட்ட மற்றும் மண்டல அளவிலான போட்டிகள் செப்டம்பர் 9 முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை நடைபெறுகின்றன. நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இந்த ஆண்டு முதல்-அமைச்சர் கோப்பை போட்டிகளில் பங்கேற்க இதுவரை இல்லாத அளவுக்கு 26,38,267 பேர் இணையதளம் மூலம் பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார். கடந்த ஆண்டு 16.28 லட்சம் பேர் பதிவு செய்திருந்த நிலையில், இந்த ஆண்டு 10,09,918 பதிவுகள் கூடுதலாக கிடைத்துள்ளதாகவும் கூறினார். இந்த போட்டிகளில் 14,86,912 பள்ளி மாணவ-மாணவியர்கள், 5,35,965 கல்லூரி மாணவ-மாணவியர்கள், 38,058 மாற்றுத்திறனாளிகள், 69,890 அரசு ஊழியர்கள் மற்றும் 5,07,741 பொதுமக்கள் என பெருமளவில் பங்கேற்கின்றனர். மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் மொத்தம் 1,09,633 வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை வெல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். சென்னையில் 99,119 பேர் பதிவு செய்துள்ள நிலையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பொறுப்பு வகிக்கும் திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக 1,74,462 பேர் பதிவு செய்துள்ளனர். சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பு நிதியுதவியாக தலா ரூ.7 லட்சம் வழங்கப்படுகிறது.

Advertisement
அந்த வகையில், ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்கும் 36 வீரர், வீராங்கனைகளுக்கு இன்று மொத்தம் ரூ.2.52 கோடி நிதியுதவி வழங்கப்படுகிறது. மேலும், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டு விடுதிகள் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். மாணவர்கள் கல்விக்கு வழங்கும் முக்கியத்துவத்தைப் போலவே விளையாட்டுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும், கல்வியில் சாதிப்பதைப் போல விளையாட்டிலும் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். உலக அளவில் தமிழக விளையாட்டு வீரர்கள் சாதனைகளை படைக்க தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும் எனக் குறிப்பிட்ட அமைச்சர், இளைஞர்கள் மற்றும் மாணவ-மாணவியர்கள் விளையாட்டிலும் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தொடக்க நிகழ்ச்சியில், ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஸ்குவாஷ் பிரிவில் பங்கேற்கும் தமிழக வீரர்கள் ஜோஷ்னா சின்னப்பா, வேலவன் செந்தில்குமார் மற்றும் ஷமினா ரியாஸ் ஆகியோருக்கு தலா ரூ.7 லட்சத்திற்கான காசோலைகளை அமைச்சர் வழங்கினார். இதனைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியின் சின்னம், கொடி மற்றும் வீரர்களுக்கான ஜெர்சியை அறிமுகப்படுத்திய அவர், மகளிர் கால்பந்து போட்டிக்கான டாஸ் செய்து போட்டியையும் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு செயலாளர் சந்தீப் நந்தூரி, மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பொது மேலாளர் (நிர்வாகம்) டாக்டர் ரெ.சுமன், பொது மேலாளர் ல.சுஜாதா, அரசு அலுவலர்கள் மற்றும் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு