1,500-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல்: அமெரிக்காவில் பணியாற்றிய ஐ.டி. பொறியாளர் சென்னையில் கைது
2023 முதல் 2025 வரை நாடு முழுவதும் உள்ள முக்கிய விமான நிலையங்கள், அரசியல்வாதிகளின் இல்லங்கள், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் 1,500-க்கும் அதிகமான போலி வெடிகுண்டு மிரட்டல்கள் அனுப்பப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு மிரட்டலையும் தொடர்ந்து வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் விரிவான சோதனைகளை மேற்கொண்டாலும், அனைத்தும் போலியான எச்சரிக்கைகளாகவே முடிந்தன.
இந்த வழக்கில் தொடர்புடையவராக அமெரிக்காவில் ஐ.டி. பொறியாளராக பணியாற்றி வந்த சரத் சுப்பிரமணியன் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். தமிழக பயங்கரவாத தடுப்புப் பிரிவு மற்றும் சைபர் குற்றப்பிரிவு போலீசார் இணைந்து மேற்கொண்ட நீண்டகால விசாரணையின் விளைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.விசாரணையில், தனது அடையாளத்தை மறைக்க குற்றச்சாட்டுக்குட்பட்டவர் VPN மற்றும் டார்க் வெப் தொழில்நுட்பங்களை பயன்படுத்தியிருந்தது தெரியவந்தது. ஆனால், ஒரு மிரட்டல் மின்னஞ்சலுக்கு தவறுதலாக தனது சொந்த மின்னஞ்சல் முகவரியில் இருந்து பதில் அனுப்பியதன் மூலம் அவர் போலீசாரின் கவனத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஆறு மாதங்களாக அவரை போலீசார் கண்காணித்து வந்ததுடன், அவருக்கு எதிராக 'லுக்-அவுட்' நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் வேறு யாரேனும் தொடர்புடையவர்களா என்பது குறித்து சென்னை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.போலீசார் வெளியிட்ட தகவலின்படி, கைது செய்யப்பட்டவர் சரத் சுப்ரமணியன் சங்கர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் ஆஸ்டினில் வசித்து வந்த அவர், அங்குள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், அவர் மீது ஏற்கனவே 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், பயங்கரவாத தடுப்புப் பிரிவு மட்டும் 33 வழக்குகளை பதிவு செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். போலி மிரட்டல் மின்னஞ்சல்கள் தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாகவும், தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் கூறினர்.