100-க்கும் மேற்பட்ட சேவல்கள் பலியிட்டு அன்னதானம்... ஆண்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட ஆடி படையல் விழா
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகிலுள்ள மங்களாம்பட்டி கிராமத்தில், மழை வளம் பெருக வேண்டும் என்ற நம்பிக்கையுடன் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நடைபெறும் பாரம்பரிய ஆடி படையல் திருவிழா இந்தாண்டும் நேற்று நடைபெற்றது.விழாவையொட்டி, தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதற்காக கிராம மக்கள் மதுரைவீரன் சுவாமிக்கு சேவல்களை பலியிட்டு வழிபாடு செய்தனர். இதில் 100-க்கும் அதிகமான சேவல்கள் பலியிடப்பட்டு, சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டன. வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர்.பின்னர் பலியிடப்பட்ட சேவல்கள் பெரிய பாத்திரங்களில் சமைக்கப்பட்டு, சேவல் கறியுடன் மொச்சைப்பயறு சேர்த்து உணவு தயாரிக்கப்பட்டது.
இந்த சமையல் பணிகளை முழுமையாக ஆண்களே மேற்கொண்டனர்.அதனைத் தொடர்ந்து, வாழை இலையில் பக்தர்களுக்கு சூடான உணவு பரிமாறப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதானத்தில் ஆண்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. பெண்கள் கோவிலில் வழிபாடு செய்து விட்டு திரும்பிச் சென்றனர். பெண்களுக்கு அன்னதானத்தில் பங்கேற்க அனுமதி இல்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.இந்த வழிபாட்டை நடத்துவதன் மூலம் மழை நன்கு பெய்து, விவசாயம் செழிக்கும் என்பது அந்தப் பகுதி மக்களின் நீண்டகால நம்பிக்கையாக உள்ளது. விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென சாரல் மழை பெய்ததால், அதை நல்ல அறிகுறியாக கருதி பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.