ஸ்காட்லாந்தில் இன்று தொடங்கும் 23-வது காமன்வெல்த் விளையாட்டு விழா
23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இன்று ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் கோலாகலமாக தொடங்குகிறது. ஆகஸ்ட் 2 வரை நடைபெறும் இந்த தொடரில் காமன்வெல்த் கூட்டமைப்பைச் சேர்ந்த 74 நாடுகளின் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். காமன்வெல்த் நாடுகளுக்கிடையிலான இந்த விளையாட்டு விழா 1930-ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த போட்டியின் முந்தைய தொடர் 2022-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, கென்யா, சிங்கப்பூர், பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 74 நாடுகளைச் சேர்ந்த சுமார் 3,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.முதலில் இந்த தொடரை ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அதிக செலவினம் காரணமாக அந்த நாடு விலகியதால், போட்டியை நடத்தும் பொறுப்பு கிளாஸ்கோவுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து பல விளையாட்டுகள் போட்டி அட்டவணையில் இருந்து நீக்கப்பட்டன. இந்த தொடருக்காக ஸ்காட்லாந்து சுமார் ரூ.2,000 கோடி செலவிட்டுள்ளது. இது 2022-ஆம் ஆண்டு போட்டியுடன் ஒப்பிடுகையில் சுமார் 60 சதவீதம் குறைவான செலவாகும். இந்த முறை தடகளம், பளுதூக்குதல், குத்துச்சண்டை, நீச்சல், 3×3 கூடைப்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், சைக்கிளிங், ஜூடோ, நெட்பால் மற்றும் பவுல்ஸ் என மொத்தம் 10 விளையாட்டுப் பிரிவுகளில் 215 பதக்கப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் பாரா விளையாட்டு வீரர்களுக்கான 6 போட்டிகளும் இடம்பெற்றுள்ளன.இந்தியா சார்பில் 78 வீரர்கள் மற்றும் 48 வீராங்கனைகள் என மொத்தம் 126 பேர் கொண்ட அணி 8 விளையாட்டுப் பிரிவுகளில் களமிறங்குகிறது. ஒலிம்பிக் பதக்கநாயகன் நீரஜ் சோப்ரா, பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு, குத்துச்சண்டை வீராங்கனைகள் லவ்லினா, ஜாஸ்மின் லம்போரியா, பிரீத்தி பவார், 400 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனை படைத்த தமிழக வீரர் விஷால், உயரம் தாண்டுதல் வீரர் சர்வேஷ் குஷாரே, நீளம் தாண்டுதல் வீரர் முரளி ஸ்ரீசங்கர், குண்டு எறிதல் வீரர் தேஜிந்தர் பால் சிங், வட்டு எறிதல் வீராங்கனை சீமா கலிரம்மா மற்றும் ஜூடோ வீராங்கனை துலிகா மான் உள்ளிட்டோர் இந்தியாவின் பதக்க நம்பிக்கையாக உள்ளனர்.இந்தியா 2002-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து காமன்வெல்த் பதக்கப் பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் இடம்பிடித்து வருகிறது.