வால்பாறை மலைப்பாதையில் சாலையோர தடுப்புச்சுவரில் ஓய்வெடுத்த சிறுத்தை: வனத்துறை எச்சரிக்கை
கோவை மாவட்டம் வால்பாறை மலைப்பகுதியில் சாலையோர தடுப்புச்சுவரில் சிறுத்தை ஒன்று படுத்து ஓய்வெடுத்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வால்பாறை வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் அடர்ந்த வனப்பகுதியும் பல்வேறு வனவிலங்குகளின் நடமாட்டமும் காணப்படுகிறது. வாட்டர்பால்ஸ் முதல் டைகர் பள்ளத்தாக்கு செல்லும் முக்கிய மலைச்சாலையில், பகல் நேரத்தில் சிறுத்தை ஒன்று சாலையோர தடுப்புச்சுவரில் படுத்திருந்துள்ளது. அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் சிலர் சிறுத்தையை தங்களது செல்போன்களில் வீடியோ பதிவு செய்துள்ளனர். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளதால், வால்பாறை பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் குறித்து பொதுமக்களிடையே கவனமும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.மலைப்பாதையில் செல்லும்போது வனவிலங்குகள் தென்பட்டால், அவற்றை படம் அல்லது வீடியோ எடுப்பதற்காக வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்த வேண்டாம் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.