வேண்டும் வரம் அருளும் வரலட்சுமி விரதம்
செல்வ வளத்தை அருளும் மகாலட்சுமியை பக்தியுடன் வழிபடுவதற்கு சிறப்பான நாளாக கருதப்படுவது வரலட்சுமி விரத நாளாகும். ‘வரலட்சுமி விரதம்’ என்றும் ‘வரலட்சுமி நோன்பு’ என்றும் அழைக்கப்படும் இந்த விரதத்தை பெண்கள் பக்தி சிரத்தையுடன் மேற்கொள்கின்றனர்.
‘வரலட்சுமி’ என்பதற்கு வரங்களை வழங்கும் லட்சுமி என்று பொருள். இந்த நாளில் மகாலட்சுமியை வழிபட்டால் விரும்பிய வரங்கள் கிடைப்பதுடன், ஆதி லட்சுமி, தன லட்சுமி, தானிய லட்சுமி, வீர லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜய லட்சுமி, வித்யா லட்சுமி எனப்படும் அஷ்டலட்சுமிகளின் அருளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குறிப்பாக, சுமங்கலி பெண்கள் தங்கள் கணவரின் உடல்நலம், நீண்ட ஆயுள் மற்றும் குடும்பத்தின் செல்வ வளம் பெருக வேண்டி இந்த விரதத்தை கடைப்பிடிக்கின்றனர்.
மகாலட்சுமி வீடு தேடி வந்த கதை
ஒருமுறை மகாலட்சுமி வயதான சுமங்கலி பெண்ணின் தோற்றத்தில் பூலோகத்திற்கு வந்து, எந்த வீட்டில் தங்கலாம் என்பதை அறிய வீடு வீடாகச் சென்றதாக கூறப்படுகிறது.
முதலில் சென்ற வீட்டில், பொழுது விடிந்த பின்னரும் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். அங்கிருந்து சென்ற அவர், அடுத்த வீட்டை அடைந்தபோது வீடு முழுவதும் சுத்தமின்றி குப்பையாக இருப்பதை பார்த்தார். மூன்றாவது வீட்டில் கணவன், மனைவி இருவரும் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.இதனால் அங்கிருந்தும் புறப்பட்ட மகாலட்சுமி, அடுத்த வீட்டை அடைந்தார். அந்த வீட்டின் வாசலில் அழகான கோலம் போடப்பட்டிருந்தது. பூஜையறையில் விளக்கு ஏற்றப்பட்டு, பக்திப் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. வீடு முழுவதும் மங்களகரமான சூழல் நிலவியது.இதைக் கண்ட மகாலட்சுமி, அந்த வீட்டிற்குள் செல்ல விரும்பினார். அவரை பார்த்த குடும்பத்தினர் உடனடியாக வரவேற்று உபசரித்தனர். அவருக்கு உணவு வழங்குவதற்காக குடும்பத்தினர் உள்ளே சென்றுவிட்டு திரும்பியபோது, வயதான பெண்ணை காணவில்லை.பின்னர் பூஜையறைக்குள் சென்று பார்த்தபோது, அங்கு செல்வம் நிறைந்து காணப்பட்டது. அப்போதுதான் வயதான சுமங்கலி பெண் வடிவில் தங்கள் வீட்டிற்கு வந்தது மகாலட்சுமியே என்பதை குடும்பத்தினர் உணர்ந்ததாக இந்தக் கதை கூறுகிறது. வீட்டை சுத்தம் செய்து வழிபாடுவரலட்சுமி விரத நாளில் மகாலட்சுமி பக்தர்களின் இல்லம் தேடி வருவார் என்ற நம்பிக்கை உள்ளது.
அதனால் அன்றைய தினம் வீட்டை தூய்மைப்படுத்தி, விரதம் இருந்து மகாலட்சுமியை வழிபட்டால் செல்வ வளம் பெருகி, லட்சுமி வீட்டில் நிரந்தரமாக குடியிருப்பார் என்பது ஐதீகம்.. விரதம் மேற்கொள்ளும் பெண்கள், தங்கள் இல்லத்திற்கு வரும் மகாலட்சுமியை மகிழ்ச்சியுடன் வரவேற்று, சிறப்பு பூஜைகள் செய்து வழிபட வேண்டும்.விரதத்திற்கு முந்தைய நாளே வீட்டை சுத்தம் செய்து அலங்கரிக்க வேண்டும். வீட்டு வாசலில் கோலம் போடுவதுடன், பூஜையறை அல்லது பூஜை நடைபெறும் இடத்தில் மண்டபம் அமைத்து, அதன் முன்பாகவும் கோலமிட வேண்டும். மண்டபத்தில் மகாலட்சுமியின் படம் அல்லது சிலையை வைத்து மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.பின்னர் அன்னையின் முன்பு வாழை இலையை விரித்து அதில் பச்சரிசியை பரப்ப வேண்டும். ஒரு கலசத்தில் பச்சரிசியை நிரப்பி, மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து, அதன் மேல் முழு தேங்காயை வைக்க வேண்டும். இந்த கலசத்தை பச்சரிசி பரப்பப்பட்ட வாழை இலையின் நடுவில் வைத்து, மாலை அணிவிக்க வேண்டும். அந்தக் கலசத்தையே மகாலட்சுமியாக பாவித்து வழிபட வேண்டும்.கலசத்தின் அருகில் வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், புடவை உள்ளிட்ட பொருட்களை வைத்து, விளக்கேற்றி பூஜை செய்ய வேண்டும்.
நோன்பு சரடை கட்டும் வழக்கம்
பூஜையில் மஞ்சள் பூசப்பட்ட ஒன்பது இழைகளைக் கொண்ட நோன்பு சரடையும் வைக்க வேண்டும். மகாலட்சுமிக்கு பிடித்தமான நைவேத்தியங்களை படைப்பது சிறப்பாக கருதப்படுகிறது.முதலில் முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபட்ட பிறகு பூஜையை தொடங்க வேண்டும். தொடர்ந்து மகாலட்சுமிக்கு மலர் தூவி, கற்பூர தீபம் காட்டி, அன்னைக்கு உரிய பாடல்களை பாடி வழிபட வேண்டும்.பூஜை நிறைவடைந்ததும், நோன்பு சரடை கணவனின் கையால் கட்டிக் கொள்வது வழக்கம். இதன் மூலம் நீண்ட காலம் சுமங்கலியாக வாழும் பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. திருமணமாகாத பெண்களும் நல்ல கணவன் அமைய வேண்டும் என்ற வேண்டுதலுடன் வரலட்சுமி பூஜையில் பங்கேற்று வழிபடலாம்.வரலட்சுமி விரத நாளில் மகாலட்சுமிக்கு படைக்கப்படும் நைவேத்தியங்களை வீட்டிற்கு வரும் பக்தர்கள் மட்டுமின்றி, ஏழை, எளிய மக்களுக்கும் வழங்குவது சிறப்பானதாக கருதப்படுகிறது.