அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “தமிழக முதல்-அமைச்சர் விஜய் லண்டன் சென்றிருந்தபோது நடிகர் அஜித்தை சந்தித்தது அவரது பண்பாட்டை வெளிப்படுத்தும் நிகழ்வாகும். அதில் விமர்சனம் செய்வதற்கு எதுவும் இல்லை. ஆனால், முதல்-அமைச்சர் விஜய்யின் லண்டன் பயணத்தின் மூலம் தமிழகத்திற்கு கிடைத்த பலன்கள் என்ன என்பது குறித்து மக்களுக்கு அரசு தெளிவுபடுத்த வேண்டும். லண்டன் பயணத்தின்போது ஈர்க்கப்பட்டதாக கூறப்படும் முதலீடுகள் தொடர்பான முழுமையான விவரங்களை தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
Advertisement
அந்த முதலீடுகளுக்கான இருதரப்பு ஒப்பந்தங்கள் எப்போது கையெழுத்தாகும், திட்டங்கள் எப்போது நடைமுறைக்கு வரும் என்பதையும் தெரிவிக்க வேண்டும். மேலும், இந்த முதலீடுகள் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்பதற்கான விவரங்களும் அந்த வெள்ளை அறிக்கையில் இடம்பெற வேண்டும். தமிழக அரசு இதுகுறித்து வெளிப்படையான தகவல்களை மக்களிடம் வெளியிட வேண்டும்” என்றார். இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.