சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ராதா பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். தனது சகோதரி நடிகை அம்பிகா நாயர் மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் ஆகியோர் இணைந்து ரூ.46 கோடி அளவிலான காசோலைகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். 1980-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த சகோதரிகள் அம்பிகா மற்றும் ராதா, பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர். ராதா தனது புகார் மனுவில், ‘ஆர்.ஆர். கார்டன்’ என்ற பெயரில் தொழில் செய்து வருவதாக தெரிவித்துள்ளார். சென்னைக்கு வரும்போது வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டின் தரைத்தளப் பகுதியில் தங்குவது வழக்கம் என்றும், அதே பகுதியில் தனது சகோதரி அம்பிகாவும் தங்கியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். உறவுமுறையை கருத்தில் கொண்டு, தனது பகுதிக்கு அம்பிகா வந்து செல்ல அனுமதித்ததாகவும் ராதா தெரிவித்துள்ளார். தொழிலாளர்களின் சம்பளம், மின்சாரக் கட்டணம், சொத்துவரி, குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணம், தோட்ட பராமரிப்புப் பொருட்களுக்கான செலவு உள்ளிட்டவற்றை செலுத்துவதற்காக, கையொப்பமிட்ட 5 அல்லது 6 காலிக் காசோலைகளை தனது அறையில் வைத்திருப்பது வழக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.
Advertisement
‘ஆர்.ஆர். கார்டன்’ என்ற புதிய வணிகப் பெயரில் தனக்கு புதிய காசோலை புத்தகம் வழங்கப்பட்டு, தற்போது அதையே பயன்படுத்தி வருவதாகவும் ராதா தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கடந்த 17-ம் தேதி தனது வங்கிக் கிளையிலிருந்து வந்த மின்னஞ்சலில், தனது காசோலைகள் அம்பிகா நாயர் பெயரில் பணமாக்குவதற்காக சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்ததாக அவர் கூறியுள்ளார். இதையடுத்து வங்கியை உடனடியாக தொடர்புகொண்டு, காசோலைகள் திருடப்பட்டு சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து, அவற்றுக்கான பணப் பரிவர்த்தனையை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டதாகவும் புகாரில் ராதா தெரிவித்துள்ளார். மேலும், அம்பிகா நாயரும் தனது சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயரும் கூட்டாக சதி செய்து, தான் இல்லாத நேரத்தில் தனது அறைக்குள் அத்துமீறி நுழைந்து, கையொப்பமிட்டிருந்த காலிக் காசோலைகளை எடுத்துச் சென்றதாக ராதா குற்றம்சாட்டியுள்ளார். பின்னர் அந்த காசோலைகளில் தங்களது விருப்பப்படி பெயர், தொகை மற்றும் தேதியை குறிப்பிட்டு, வங்கியில் பணமாக்குவதற்காக சமர்ப்பித்ததாகவும் அவர் புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், வழக்கு தொடர்பான கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.