Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
புதன் | 04 நவம்பர் 2026 | 18 ஐப்பசி பராபவ வருடம்

ரூ.19.20 கோடியில் நவீன பட்டுக்கூடு அங்காடி வளாகம்... தருமபுரியில் முதல்-அமைச்சர் விஜய் திறப்பு

ரூ.19.20 கோடியில் நவீன பட்டுக்கூடு அங்காடி வளாகம்... தருமபுரியில் முதல்-அமைச்சர் விஜய் திறப்பு

தருமபுரி மாவட்டம் சோகத்தூரில் ரூ.19.20 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அரசு பட்டுக்கூடு அங்காடி வளாகத்தை முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இன்று திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தருமபுரி மாவட்டம் சோகத்தூரில் சுமார் 80 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், ரூ.19 கோடியே 20 லட்சம் செலவில் இந்தப் புதிய பட்டுக்கூடு அங்காடி வளாகம் கட்டப்பட்டுள்ளது. பட்டுக்கூடுகளின் விற்பனை மற்றும் கொள்முதல் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் இது உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் முக்கிய பட்டுக்கூடு விற்பனை மையங்களில் ஒன்றாக தருமபுரி அரசு பட்டுக்கூடு அங்காடி விளங்கி வருகிறது. கடந்த 40 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இந்த அங்காடியில், ஆண்டுதோறும் சராசரியாக 600 மெட்ரிக் டன் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் மூலம் சுமார் 15 முதல் 20 மாவட்டங்களைச் சேர்ந்த பட்டு விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். பட்டுக்கூடுகளின் வரத்தை அதிகரிப்பதுடன், எதிர்காலத்தில் பட்டு நூற்பாளர்களுக்குத் தேவையான அளவு பட்டுக்கூடுகள் கிடைப்பதை உறுதி செய்யவும், விவசாயிகளின் பொருளாதார நிலையை உயர்த்தவும் இந்த ஒருங்கிணைந்த வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் பட்டுக்கூடு விற்பனைக்கான தனிக் கட்டடம், ஆண் மற்றும் பெண் விவசாயிகள், பட்டு நூற்பாளர்கள் ஆகியோருக்குத் தனித்தனியாகக் காத்திருப்பு அறைகள், உணவகம், வாகன நிறுத்துமிடம், அணுகுசாலை, மின்சார வசதி, ஆழ்துளைக் கிணறு, குடிநீர் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பட்டுப்புழு வளர்ப்புக்குத் தேவையான இடுபொருட்களை விற்பனை செய்யும் மையமும் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, அலுவலர்களுக்கான குடியிருப்புகள், தொழில்நுட்ப சேவை மையம், விவசாயிகள் பயிற்சி மையம் உள்ளிட்ட 9 கட்டடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

Advertisement
வளாகத்தைச் சுற்றி 1,110 மீட்டர் நீளத்துக்கு சுற்றுச்சுவரும் கட்டப்பட்டுள்ளது. புதிய வளாகம் பயன்பாட்டுக்கு வந்துள்ளதால் பட்டுக்கூடுகள் விற்பனை மற்றும் கொள்முதல் நடவடிக்கைகள் கூடுதல் வசதியுடன் நடைபெறுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. குறிப்பாக, மின்னணு ஏலத்தின் மூலம் விவசாயிகள் வெளிப்படையான முறையில் சீரான விற்பனைப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். தொலைதூர மாவட்டங்களில் இருந்து பட்டுக்கூடுகளைக் கொண்டு வரும் விவசாயிகள் மற்றும் பட்டு நூற்பாளர்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும். நவீன கட்டமைப்புகள் மற்றும் தொலைநோக்குத் திட்டங்கள் வாயிலாக தமிழகத்தில் பட்டுவளர்ச்சித் துறையை மேலும் வலுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தேசிய அளவில் பட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக உருவாக்குவதுடன், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும். இந்தப் புதிய அங்காடி வளாகத்தின் மூலம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பட்டு விவசாயிகள், பட்டு நூற்பாளர்கள் மற்றும் பட்டு முறுக்கேற்றும் தொழிலில் ஈடுபடுவோர் பயன்பெறுவார்கள் என அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திறப்பு விழாவில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ. மதன்ராஜா, தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை செயலாளர் ஆர். லில்லி, பட்டு வளர்ச்சித் துறை இயக்குநர் ரெ. சதீஸ் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,135
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு