ராமேஸ்வரம் அருகே மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் வலையில் 112 கிலோ எடை கொண்ட பிரமாண்ட சூரை மீன் சிக்கியது. இந்த மீன் ரூ.22 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. பாம்பன் வடக்கு கடற்கரை பகுதியில் இருந்து நாட்டுப்படகில் 6 மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, பெரிய மீன் ஒன்று அவர்களின் வலையில் சிக்கியது. இதையடுத்து அந்த மீனை படகில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்தனர்.
Advertisement
அப்போது, வலையில் சிக்கியது சூரை மீன் என்பது தெரியவந்தது. சுமார் 6 அடி நீளமும், 112 கிலோ எடையும் கொண்ட அந்த மீனைப் பார்த்து சக மீனவர்கள், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஆச்சரியமடைந்தனர். பின்னர் வியாபாரி ஒருவர் அந்த மீனை ரூ.22 ஆயிரத்துக்கு வாங்கினார். தொடர்ந்து, அந்த சூரை மீன் கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கு முன்பும் இதே பகுதியில் மீனவர்களின் வலையில் 106 கிலோ எடையுள்ள சூரை மீன் சிக்கியது குறிப்பிடத்தக்கது.