ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலின் புகழ்பெற்ற 3-ம் பிரகாரம் தற்போது பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் கவனத்தை அதிகளவில் ஈர்த்து வருகிறது. சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில், ராமேசுவரம் கோவிலின் 3-ம் பிரகாரத்தின் காட்சிகள் இடம்பெற்றதன் தாக்கமாக, அதனை நேரில் காண கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாக ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் சிறப்புப் பெற்றுள்ளது. இக்கோவிலில் அமைந்துள்ள 3-ம் பிரகாரம் உலகப் புகழ்பெற்ற கட்டிடக்கலை சிறப்புகளில் ஒன்றாக திகழ்கிறது. கி.பி. 1740 முதல் 1770-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ராமநாதபுரம் சீமையை ஆட்சி செய்த முத்துராமலிங்க சேதுபதி மன்னரால் இந்த பிரகாரம் கட்டப்பட்டது. ஒரே வடிவமைப்பில் அமைந்துள்ள 1,212 தூண்கள் இந்த பிரகாரத்தின் முக்கிய சிறப்பாக விளங்குகின்றன. ராமேசுவரம் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், நீண்ட தூரம் தொடர்ச்சியாக அமைந்துள்ள ஒரே மாதிரியான தூண்களின் அழகை ரசிப்பது வழக்கம்.
Advertisement
தற்போது இந்த 3-ம் பிரகாரம் குறித்த கவனம் மேலும் அதிகரித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் ரஷியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களை வரவேற்ற பின்னணியில் ராமேசுவரம் கோவிலின் 3-ம் பிரகாரத்தின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. மேலும், அதன் சிறப்புகள் குறித்து பிரதமர் மோடியும் உலக நாடுகளின் தலைவர்களிடம் எடுத்துரைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ராமேசுவரம் கோவிலின் 3-ம் பிரகாரத்தை நேரில் பார்வையிட பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கோவிலில் தரிசனம் முடித்துவிட்டு அம்பாள் சன்னதி வழியாக வெளியே வரும் பக்தர்கள், 3-ம் பிரகாரத்தின் நீண்ட தூண்களை வியப்புடன் பார்த்து ரசித்து செல்கின்றனர். ராமேசுவரம் கோவிலின் சிறப்பை உலக அளவில் கவனத்திற்கு கொண்டு வந்த பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் ராமேசுவரம் பகுதி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.