ராமநாதபுரத்திற்கு முதல்முறையாக வரும் தொழில் திட்டம்: புதிய நிறுவனங்கள் எந்தெந்த மாவட்டங்களுக்கு வருகிறது?
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் புதிய தொழில் திட்டங்கள் மற்றும் விரிவாக்கத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதில், ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்முறையாக தொழில் திட்டம் தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தில் த.வெ.க. அரசு பொறுப்பேற்று வரும் 17-ந் தேதியுடன் 100 நாட்கள் நிறைவடைகிறது. இந்த காலகட்டத்திற்குள் ரூ.1 லட்சம் கோடி அளவிலான தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. சென்னையில் இன்று நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.இதில் 55 திட்டங்கள் புதிதாக தொடங்கப்பட உள்ள திட்டங்களாகவும், 50 திட்டங்கள் ஏற்கனவே செயல்பட்டு வரும் நிறுவனங்களின் விரிவாக்க நடவடிக்கைகளாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. முக்கிய தொழில் திட்டங்கள் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்: தூத்துக்குடியில் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம், ஏவுகலன்கள் உற்பத்தி, சேமிப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் சோதனைக்கான வசதிகளை அமைக்க உள்ளது. இதற்காக ரூ.250 கோடி முதலீடு செய்யப்பட்டு, 500 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட உள்ளது. அக்னிகுல் காஸ்மோஸ்: தூத்துக்குடியில் அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனம் மீண்டும் பயன்படுத்தக்கூடிய திரவ உந்துவிசை ஏவுகலன்களுக்கான உற்பத்தி மற்றும் ஒருங்கிணைப்பு வசதிகளை அமைக்கிறது. ரூ.400 கோடி முதலீட்டில் மேற்கொள்ளப்படும் இந்த திட்டத்தின் மூலம் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அல்ட்ராவயலட்: கிருஷ்ணகிரியில் மின்சார இருசக்கர வாகன உற்பத்தி ஆலையை அல்ட்ராவயலட் நிறுவனம் அமைக்க உள்ளது. ரூ.779 கோடி முதலீட்டில் உருவாகும் இந்த ஆலையில் 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படும். சூப்பர் மைக்ரோ: அமெரிக்காவைச் சேர்ந்த சூப்பர் மைக்ரோ நிறுவனம் சென்னையில் சர்வர் உற்பத்தி மற்றும் ஒருங்கிணைப்பு மையத்தை அமைக்கவுள்ளது. இதற்காக ரூ.477 கோடி முதலீடு செய்யப்பட்டு, 150 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும். ஒய்.கே.கே., ஜப்பான்: ஜப்பானைச் சேர்ந்த ஒய்.கே.கே. நிறுவனம் திருவள்ளூரில் ஜிப்பர்கள் மற்றும் இணைப்பு சாதனங்கள் தயாரிக்கும் ஆலையை அமைக்கிறது. ரூ.1,651 கோடி முதலீட்டில் உருவாகும் இந்த திட்டம் மூலம் 4,316 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஷைலி இன்ஜினீயரிங் ப்ளாஸ்டிக்ஸ்: நுகர்வோர் மின்னணு சாதனங்களுக்கான உதிரிபாகங்களை தயாரிக்கும் ஆலையை தமிழ்நாட்டில் ஷைலி இன்ஜினீயரிங் ப்ளாஸ்டிக்ஸ் நிறுவனம் அமைக்க உள்ளது. குஜராத்துக்கு வெளியே அந்நிறுவனம் மேற்கொள்ளும் முதல் முதலீடு இதுவாகும். ரூ.500 கோடி முதலீட்டில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் 400 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும்.