கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய வேளாண் உற்பத்திப் பொருளாக விளங்கும் ரப்பரின் விலை, கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. கேரளா மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நிலவும் பருவநிலை மாற்றங்கள் காரணமாக ரப்பர் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தென்னிந்தியாவின் முக்கிய ரப்பர் உற்பத்திப் பகுதிகளான கேரளா மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில், செப்டம்பர் மாதத்தில் வழக்கத்திற்கு மாறாகக் கடுமையான வெயில் நிலவியது. இதனால் ரப்பர் மரங்களில் இருந்து கிடைக்கும் பால் அளவு குறைந்தது. குறிப்பாக, இரண்டு வாரங்களுக்கு முன்பு வெயிலின் தாக்கத்தால் ரப்பர் பால் உற்பத்தி சுமார் 30 சதவீதம் வரை சரிந்தது. இதற்கிடையே, கன்னியாகுமரி மாவட்டத்தின் மலையோரப் பகுதிகளில் அவ்வப்போது மிதமான சாரல் மழை பெய்து வருவதால், ரப்பர் பால் உற்பத்தியில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், சந்தையில் ரப்பரின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. தற்போது இயற்கை ரப்பரின் விலை குவிண்டாலுக்கு (100 கிலோ) ரூ.4,000 வரை உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ரப்பரில் சுமார் 90 சதவீதம் கேரளாவில் விளைகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 28,000 ஹெக்டேர் பரப்பளவில் ரப்பர் சாகுபடி நடைபெறுகிறது. விளவங்கோடு, கல்குளம், தோவாளை ஆகிய தாலுகாக்கள் ரப்பர் சாகுபடியில் முக்கியப் பகுதிகளாக உள்ளன என்றனர். பொதுவாக ஒரு குவிண்டால் ரப்பர் ரூ.17,000 முதல் ரூ.18,000 வரை விற்பனை செய்யப்படும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் மழைப்பொழிவு அதிகரிப்பதால் ரப்பர் மரங்களில் பால் வடிவது குறையும். இதன் காரணமாக மழைக்காலத்தில் ரப்பரின் விலை உயர்ந்து, ஒரு குவிண்டால் ரூ.24,000 வரை விற்பனையாவது வழக்கம். ஆனால், நடப்பாண்டில் ரப்பரின் விலை வழக்கமான அளவைத் தாண்டி ரூ.27,000 முதல் ரூ.30,000 வரை உயர்ந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கிய விலை ஏற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது. மழைக்காலம் முடிவடையும் வரை ரப்பரின் விலை உயர்வு தொடர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.