கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பரின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், ரப்பர் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குமரி மாவட்டத்தின் முக்கிய வேளாண் உற்பத்திப் பொருட்களில் ஒன்றான ரப்பரின் விலை, கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது அதிகரித்து வருகிறது. தென்னிந்தியாவில் ரப்பர் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் கேரளா மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்தில் வழக்கத்தை விட கடுமையான வெயில் நிலவியது. இதன் காரணமாக ரப்பர் மரங்களில் இருந்து கிடைக்கும் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டது. குறிப்பாக, சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெயிலின் தாக்கத்தால் குமரி மாவட்டத்தில் ரப்பர் பால் உற்பத்தி 30 சதவீதம் வரை குறைந்திருந்தது. தற்போது மலையோரப் பகுதிகளில் அவ்வப்போது மிதமான சாரல் மழை பெய்து வருவதால், ரப்பர் பால் உற்பத்தி சற்று அதிகரித்துள்ளது. இதற்கிடையே கேரளா மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பரின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று கோட்டயம் சந்தையில் வியாபாரி விலையாக ஆர்.எஸ்.எஸ். 4 தர ரப்பர் கிலோ ரூ.271-க்கும், ஆர்.எஸ்.எஸ். 5 தர ரப்பர் கிலோ ரூ.266-க்கும், ஐ.எஸ்.எஸ். தர ரப்பர் கிலோ ரூ.256-க்கும் விற்பனையானது. ரப்பர் வாரியம் வெளியிட்ட விலையின்படி, ஆர்.எஸ்.எஸ்.
Advertisement
4 தர ரப்பர் கிலோ ரூ.279 ஆகவும், ஆர்.எஸ்.எஸ். 5 தர ரப்பர் கிலோ ரூ.274 ஆகவும் இருந்தது. 80 சதவீத ஒட்டுப்பாலின் விலை கிலோ ரூ.191 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ரப்பரின் விலை உயர்ந்து வருவது குமரி மாவட்ட விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து குலசேகரத்தைச் சேர்ந்த முன்னணி ரப்பர் வியாபாரி ஒருவர் கூறியதாவது: அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் காரணமாக இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் வரத்து பாதிக்கப்பட்டது. கச்சா எண்ணெயில் இருந்து செயற்கை ரப்பர் தயாரிக்கப்படுவதால், எண்ணெய் வரத்து பாதிப்பால் செயற்கை ரப்பரின் விலையும் உயர்ந்தது. இதன் தொடர்ச்சியாக இயற்கை ரப்பரின் விலையும் அதிகரிக்கத் தொடங்கியது. தற்போது கச்சா எண்ணெய் இறக்குமதி சீரடைந்துள்ள நிலையிலும், ரப்பரின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சி மற்றும் ரப்பருக்கான தேவை அதிகரித்திருப்பதே இதற்கு முக்கிய காரணமாகும். தற்போது நாட்டில் ரப்பருக்கான தேவையை ஒப்பிடும்போது உற்பத்தி குறைவாக உள்ளது. இதனால் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உற்பத்திக்கும் தேவைக்கும் இடையிலான இடைவெளி குறைந்தால், எதிர்காலத்தில் ரப்பர் விலை குறைய வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார்.