மேயர் பிரியா அறிவித்த 90 திட்டங்கள் மறுஆய்வுக்கு: மதிப்பீடுகளை பரிசீலிக்க அரசு உத்தரவு
சென்னை மாநகராட்சியின் 2026–27 நிதியாண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 90 புதிய திட்டங்களுக்கான செலவுத்திட்ட மதிப்பீடுகளை மறுபரிசீலனை செய்ய தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், அந்த திட்டங்களை அறிவித்த மேயர் பிரியாவுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பெருநகர சென்னை மாநகராட்சியின் 2026–27 நிதியாண்டுக்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, 90 புதிய வளர்ச்சித் திட்டங்களை மேயர் பிரியா அறிவித்தார்.அந்த பட்ஜெட்டில் மொத்த வருவாய் ரூ.7,717 கோடியாகவும், மொத்த செலவு ரூ.9,319 கோடியாகவும் கணிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் ரூ.1,602 கோடி நிதிப் பற்றாக்குறை ஏற்படும் எனவும் குறிப்பிடப்பட்டது.மேலும், உலக வங்கி மற்றும் ஜப்பான் வளர்ச்சி வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட ரூ.2,000 கோடி கடனுக்கு ஆண்டுதோறும் ரூ.95.20 கோடி வட்டி செலுத்தப்பட்டு வருவதாகவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அறிவிப்புகளில், மாநகராட்சி பள்ளிகளுக்காக 50 கிலோமீட்டர் பாதுகாப்பான வழித்தடங்கள் அமைக்க ரூ.200 கோடி, 30 நீர்நிலைகளை மேம்படுத்த ரூ.100 கோடி, 60 பூங்காக்களை அறிவியல் முறையில் புதுப்பிக்க ரூ.60 கோடி மற்றும் நீர்வழிக் கால்வாய்களில் வெள்ளத் தடுப்பு சுவர்கள் அமைக்க ரூ.55 கோடி உள்ளிட்ட திட்டங்கள் இடம்பெற்றிருந்தன.அதேபோல், 100 மாநகராட்சி பள்ளிகளுக்கு ரூ.60 லட்சம் செலவில் பிரிண்டர்கள் வாங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.