Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 15 அக்டோபர் 2026 | 29 புரட்டாசி பராபவ வருடம்

மேட்டூர் அணையில் நீர்மட்டம் சரிவு: முழுமையாக காட்சியளிக்கும் ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை

மேட்டூர் அணையில் நீர்மட்டம் சரிவு: முழுமையாக காட்சியளிக்கும் ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால், நீர்த்தேக்கப் பகுதியில் அமைந்துள்ள பழமையான ஜலகண்டேஸ்வரர் கோவிலின் நந்தி சிலை தற்போது அதன் பீடம் வரை முழுமையாக வெளியே தெரிகிறது. மேலும், கோவில் கோபுரமும் தண்ணீருக்கு மேலே காட்சியளிக்கத் தொடங்கியுள்ளது. மேட்டூர் அணை கட்டப்பட்டபோது, நீர்த்தேக்கப் பகுதியில் வசித்து வந்த கிராம மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அப்போது அவர்கள் வழிபட்டு வந்த சிலைகளை வேறு இடங்களுக்கு எடுத்துச் சென்ற நிலையில், சில பழமையான கட்டடங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் அப்படியே விடப்பட்டன. அவற்றில் பண்ணவாடி பரிசல் துறை அருகே உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில், சேத்துக்குழி பகுதியில் அமைந்துள்ள இரட்டை கோபுரங்களைக் கொண்ட கிறிஸ்தவ தேவாலயம், கீரைக்காரனூரில் உள்ள சோளப்பாடி வீரபத்திரன் கோவில், தேங்கல்வரை அருகேயுள்ள மீனாட்சி அம்மன் கோவில் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

அணையின் நீர்மட்டம் 79 அடிக்குக் கீழே குறைந்தபோது, சேத்துக்குழி பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் இரட்டை கோபுரங்களும் தண்ணீருக்கு மேலே தெரியத் தொடங்கின. சில ஆண்டுகளுக்கு முன்பு அவற்றில் ஒரு கோபுரம் சாய்ந்தது. இதனால், அணையின் நீர்மட்டம் 77 அடிக்குக் கீழே செல்லும்போது மற்றொரு கோபுரம் மட்டும் வெளியே தெரியும் நிலை ஏற்பட்டது.

Advertisement
அந்த வகையில், கடந்த 1-ஆம் தேதி தேவாலயத்தின் ஒற்றைக் கோபுரம் மீண்டும் தண்ணீருக்கு மேலே காட்சியளிக்கத் தொடங்கியது. தொடர்ந்து, கடந்த 7-ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 68 அடிக்குக் கீழே சென்றபோது, ஜலகண்டேஸ்வரர் கோவிலின் நந்தி சிலையும் தண்ணீருக்கு மேலே தெரிய ஆரம்பித்தது. இந்நிலையில், நேற்று அணையின் நீர்மட்டம் 60 அடிக்குக் கீழே குறைந்ததால், நந்தி சிலை அமைந்துள்ள பீடம் வரை முழுமையாக வெளியே தெரிகிறது. இதனுடன் கோவிலின் கோபுரமும் தண்ணீருக்கு மேலே தென்படத் தொடங்கியுள்ளது. அணையின் நீர்மட்டம் மேலும் குறையும் பட்சத்தில், ஜலகண்டேஸ்வரர் கோவிலின் கோபுரம், நந்தி சிலையின் பீடம் மற்றும் கிறிஸ்தவ தேவாலயத்தின் ஒற்றைக் கோபுரம் ஆகியவை தண்ணீருக்கு மேலே இன்னும் தெளிவாகக் காட்சியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக, இந்தப் பகுதிகளில் நீர்மட்டம் குறையும் காலங்களில் பண்ணவாடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பரிசல்களில் சென்று பழமையான கோவில் கோபுரங்கள், நந்தி சிலை மற்றும் கிறிஸ்தவ தேவாலயத்தின் கோபுரம் ஆகியவற்றைப் பார்வையிட்டு வழிபடுவது வழக்கம். தற்போது இந்த வரலாற்றுச் சின்னங்கள் மீண்டும் வெளியே தெரியத் தொடங்கியுள்ளதால், வரும் நாட்களில் பண்ணவாடி பரிசல் துறைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,515
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு