தமிழக முதல்-அமைச்சர் விஜய் பட்டு வேட்டி, சட்டை அணிந்து வருவது குறித்த கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றியது. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்த அக்கட்சியின் தலைவர் விஜய், முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்றார். பதவியேற்பு நிகழ்வின்போது அவர் கோட்-சூட் அணிந்திருந்தது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்தது. தமிழக அரசியலில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுவாக வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பது வழக்கம். ஆனால், விஜய் கோட்-சூட் அணிந்து வந்தது விவாதத்தை ஏற்படுத்தியது. பின்னர் அவர் வெள்ளைச் சட்டைக்கு மாறியதுடன், சில நிகழ்வுகளில் பட்டு வேட்டி, சட்டையும் அணிந்து வந்தார். இதற்கிடையே, பிரதமர் மோடியைச் சந்தித்தபோது விஜய் அடர் கருநீல நிறச் சட்டை அணிந்திருந்ததும் பேசுபொருளானது.
Advertisement
பிரதமர் மோடி பங்கேற்ற சென்னை நிகழ்ச்சிகளிலும் விஜய் அடர் கருநீல நிறச் சட்டை மற்றும் பேண்ட் அணிந்திருந்தார். அவரது இந்த உடைத் தேர்வு குறித்து பல்வேறு கருத்துகள் எழுந்தன. ஐ.ஐ.டி. நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் சிலர், விஜய் தனது உடையின் மூலமாகவே எதிர்ப்பைப் பதிவு செய்ததாகவும், அது அவரது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் குறியீடு என்றும் தெரிவித்தனர். இந்நிலையில், விஜய் பட்டு வேட்டி, சட்டை அணிந்து வருவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தார். அப்போது, வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே முதல்-அமைச்சர் விஜய் பட்டு வேட்டி, சட்டை அணிந்து வருவார் என்றும், மற்ற நாட்களில் சாதாரண உடையில்தான் வருவார் என்றும் அவர் தெரிவித்தார்.