முதல்-அமைச்சர் வரும்போது எதிர்க்கட்சித்தலைவர் எழுந்து நிற்க வேண்டாமா? - அமைச்சர் ரமேஷ் கேள்வி
சட்டசபையில் கண்ணியத்துடன் நடந்து கொள்வது தொடர்பாக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொள்வதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.சட்டசபையில் பேசிய அவர், “சட்டசபைக்கு நாங்கள் அனைவரும் புதிதாக வந்துள்ளோம். அவையில் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்தை ஏற்கிறோம். அதேநேரத்தில், அவையின் நடைமுறைகள் குறித்து எதிர்க்கட்சித்தலைவருக்கும் அவர் எடுத்துக்கூற வேண்டும்.8 கோடி மக்களின் பிரதிநிதியாக இருக்கும் முதல்-அமைச்சர் சட்டசபைக்கு வரும்போது, அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்துகிறோம். ஆனால், எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதல்-அமைச்சர் விஜய் அவைக்கு வரும்போது எழுந்து நிற்காமல் இருக்கிறார்.
எனவே, எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டசபையில் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும்” என்றார்.அமைச்சர் ரமேஷின் இந்த பேச்சுக்கு தி.மு.க. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் சட்டசபையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் நேரு பேசுகையில், “முதல்-அமைச்சர் சட்டசபைக்குள் வரும்போது எதிர்க்கட்சித்தலைவர் எழுந்து நிற்பது என்பது குற்றமோ, குறையோ அல்ல. அது அவரவர் கடைப்பிடிக்கும் நடைமுறை. தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதும், முதல்-அமைச்சர் வரும்போது எதிர்க்கட்சித்தலைவர் எழுந்து நின்றதில்லை. எனவே, எதிர்க்கட்சித்தலைவர் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என்ற விதி இல்லை” என்று விளக்கம் அளித்தார்.