மின்சாரம் தாக்கி 11 வயது பள்ளி மாணவி உயிரிழப்பு; தூத்துக்குடியில் சோகம்
தூத்துக்குடியில் வீட்டில் இயங்கிக் கொண்டிருந்த தண்ணீர் மோட்டாரின் சுவிட்சை அணைக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி 11 வயது பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடி காதர்மீரான் நகரைச் சேர்ந்த ராஜசேகர் – சுப்புலட்சுமி தம்பதியரின் இரண்டாவது மகளான பிரியதர்ஷினி (11), புதிய துறைமுகப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிய அவர், மேல்நிலை நீர்த் தொட்டி நிரம்பியிருப்பதை கவனித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இயங்கிக் கொண்டிருந்த வாட்டர் மோட்டாரை நிறுத்துவதற்காக சுவிட்சை அணைக்கச் சென்றபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது.இதில் கடுமையாக காயமடைந்த சிறுமியை குடும்பத்தினர் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.பின்னர் பிரியதர்ஷினியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக தெர்மல்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பள்ளியில் இருந்து வீடு திரும்பிய சில நிமிடங்களிலேயே மாணவி உயிரிழந்த இந்த துயரச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.