மழை வெள்ள முன்னெச்சரிக்கை: அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் என். ஆனந்த்
தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜயின் உத்தரவின்படி, சென்னை மாவட்டத்தில் மழைக்கால வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடையாறு ஆறு மற்றும் தெற்கு பக்கிங்ஹாம் கால்வாயில் தூர்வாரி சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்தப் பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். காலை 9 மணியளவில் சென்னை மாவட்டம் ஆலந்தூர் வட்டம், மணப்பாக்கம் பகுதியில் உள்ள அடையாறு ஆற்றில் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து காலை 11 மணியளவில் சோழிங்கநல்லூர் வட்டத்தில், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலை இணையும் மேம்பாலம் அருகே உள்ள தெற்கு பக்கிங்ஹாம் கால்வாயிலும் தூர்வாரும் பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்து ஆய்வு செய்தார். சென்னையின் முக்கிய மூன்று ஆறுகளில் ஒன்றான அடையாறு ஆறு, ஆதனூர் ஏரியில் தோன்றி மொத்தம் 42.38 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து, பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது. 808 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளை உள்ளடக்கிய இந்த ஆற்றில், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஏரிகளின் நீரும், செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீரும், மழைநீரும் சேர்கின்றன. செம்பரம்பாக்கம் ஏரியின் உபரி நீர் சுமார் 17.18 கிலோமீட்டர் தூரம் அடையாறு ஆற்றில் பாய்கிறது. அதன் பின்னர் ஆறு சுமார் 17 கிலோமீட்டர் சென்னை மாவட்டத்தில் பாய்ந்து கடலில் கலக்கிறது.பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குள் செல்லும் அடையாறு ஆற்றில் ஆகாயத்தாமரை, நீர்த்தாவரங்கள் மற்றும் மிதக்கும் கழிவுகள் அதிகளவில் தேங்கியிருப்பதால் நீரோட்டம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நீர்வளத்துறையும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இணைந்து மேற்கொள்ளும் தூர்வாரும் பணிகள், விமான நிலைய ஓடுபாதை கீழ் உள்ள நீரோட்டப்பாதை முதல் திரு.வி.க. பாலம் வரை மற்றும் அடையாறு முகத்துவாரப் பகுதிவரை நடைபெறவுள்ளன. இதன் மூலம் மணப்பாக்கம், நந்தம்பாக்கம், கோடம்பாக்கம், ஜாபர்கான்பேட்டை, சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் மற்றும் மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை மற்றும் வெள்ளநீர் தடையின்றி செல்லும் சூழல் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பழவேற்காடு ஏரியிலிருந்து மரக்காணம் உப்பங்கழி வரை அமைந்துள்ள பக்கிங்ஹாம் கால்வாய் 167 கிலோமீட்டர் நீளமுடையது.