திருவண்ணாமலை அருகே மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட உறவினரை இரும்புக்கம்பியால் தாக்கிக் கொலை செய்த செங்கல் சூளை தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகேயுள்ள நல்லாம்பாளையத்தைச் சேர்ந்த பச்சையப்பனின் மகன் பாண்டியன் (30). இவரது மனைவி பிரியதர்ஷினி (21). இவர்கள் இருவரும் குடும்பத்துடன் திருவண்ணாமலை மாவட்டம், வெறையூர் அருகே உள்ள பெருமணம் பகுதியில் செந்தில் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் இயங்கி வரும் செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்தனர். இதே செங்கல் சூளையில் பாண்டியனின் உறவினரான வெள்ளிக்கண்ணுவின் மகன் கன்னியப்பன் (36), தனது மனைவி கல்பனாவுடன் வேலை செய்து வந்தார். கன்னியப்பன் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை பாண்டியன் பலமுறை தட்டிக்கேட்டுள்ளார்.
Advertisement
இதனால் ஆத்திரமடைந்த கன்னியப்பன், பாண்டியனை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், இரும்புக்கம்பியால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பாண்டியனை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பாண்டியன் உயிரிழந்தார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வெறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கன்னியப்பனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மனைவியிடம் ஏற்பட்ட தகராறை தட்டிக்கேட்ட உறவினரையே இரும்புக்கம்பியால் தாக்கிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.